திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , தனது சமூக வலைதள பக்கத்தில் மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு:-
“மதுரை தெற்கு மாசி வீதியில் இருக்கும் ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது - திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பேரதிர்ச்சிக்கும் பெருந்துயரத்திற்கும் உள்ளானேன்.
இருவரது மரணத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிர்த் தியாகம் செய்துள்ள அந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்து நிர்க்கதியாக நிற்கும் அந்தக் குடும்பங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தீயணைப்பு வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இதுபோன்ற தீயணைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரு தீயணைப்பு வீரர்களையும் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சக வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.