"ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டுமானால், மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக , கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திவரும் “நீட்”, ரத்து செய்யப்பட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் “நீட்” தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயற்சி செய்தவர்களின் கபட எண்ணத்தைத் தகர்த்துள்ளது இன்றைய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு.
மொத்தம் 720-க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி (cleared) என நிர்ணயித்துள்ளது என்.டி.ஏ. எனும் தேசியத் தேர்வு முகமை. ஒருவர் “நீட்”டில் தேர்ச்சி பெற்றாலே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற கருத்து மாணவ - மாணவியரிடையேயும், பெற்றோரிடையேயும் பரப்பப்பட்டிருக்கிறது; ஆனால் அது உண்மையல்ல; அதன் மூலம் எம்.பி.பி.எஸ். சேர விண்ணப்பம் போட மட்டுமே அந்த மாணவர் தகுதி பெற்றவர் ஆகிறார். அவ்வளவுதான்! அதாவது, நீட் தேர்ச்சி என்பது கணிதத்தில் 100-க்கு 35 எடுத்து, “ஜஸ்ட் பாஸ்” ஆவதைப் போல.
இந்த ஆண்டு நீட் “கட்-ஆப்” மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் அனுமதி கிடைக்கலாம் என்கிறது “டைம்ஸ் ஆப் இந்தியா”.
அரசுப் பள்ளி மாணவர்களில் “நீட்” தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். அரசின் பயிற்சி மையங்களில் படித்து, 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் மாணவர்கள் நால்வர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணாக்கர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 89 பேரில், 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு - குறிப்பாக, அவர்களில் 423 மதிப்பெண் பெற்றவருக்குக் கூட எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்கிறது அந்தக் கட்டுரை.
“நீட்” தேர்வு முறையை நியாயப்படுத்தும் போலியான நோக்கில்; ‘தமிழகம் சாதிக்கிறது’ எனப் பூரிப்படைந்தோர், புளகாங்கிதம் கொண்டோர், பரப்புரை செய்யலாம் என்ற கற்பனையில் மிதந்தோர், இந்தக் கசப்பான உண்மையை அறிந்து தெளிவார்களாக!
இனியேனும் “நீட்” தேர்வு முறைக்கு வக்காலத்து வாங்குவதை சப்தமில்லாமல் நிறுத்திக் கொள்வார்களாக! தமிழக மாணவர்களின் - குறிப்பாக நகர்ப்புற, கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தரப்பிரிவு மாணவ - மாணவியரின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டுமானால், மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக , கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திவரும் “நீட்”, ரத்து செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்களாக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.