பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான வயது வரம்பை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெறக் கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ "ஆசிரியர்கள் நேரடி நியமன வயதுவரம்பு 40 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்" என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடக்கக் கல்வித் துறையை மூடி பள்ளிக்கல்வித் துறையையே சீரழிக்கும் அநியாயமான அரசாணையாகும்.
வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 10 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டு 7 ஆண்டுகளாக வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்க முடியாத அ.தி.மு.க. அரசு ஆசிரியர் கல்வி படித்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் இருள் சூழ வைக்கும் ஓர் அரசாணையை இதயமற்ற முறையில் வெளியிட்டுள்ளது.
இது "கரப்ஷன்" "கமிஷன்" "கலெக்ஷன்" தவிர எங்களுக்கு வேறு எதுவும் முன்னுரிமைக்கு உரியது இல்லை என்ற அ.தி.மு.க. அரசின் கேடுகெட்ட மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
ஆகவே, ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் 31.1.2020 தேதியிட்ட பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 12-ஐ உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.