“கொரோனாவைத் தடுப்பதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் தோல்வியடைந்த முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான இந்தக் கூட்டம், கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஒடுவதற்குத் தயாராகிவிட்டது” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (11-10-2020), திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய முப்பெரும் விழாவுக்கு தலைமை தாங்கும் மாவட்டக் கழகச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருக்கும் முன்னோடிகளே! 'மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் அ.தி.மு.க.' என்ற தலைப்பில் சிறப்பான உரையை ஆற்றியிருக்கக் கூடிய வழக்கறிஞர் அருள்மொழி அவர்களே! மாவட்டக் கழக நிர்வாகிகளே! உறுப்பினர்களே! முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! அனைவருக்கும் வணக்கம்!
பொதுவாக கழகத்தின் முப்பெரும் விழா என்றால் தலைமைக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்திலோ அல்லது ஏதாவது ஒரு நகரத்திலோ நடைபெறும். தலைவர் கலைஞர் உள்ளிட்ட நாங்கள் அனைவரும் அதில் பங்கேற்போம். மற்றபடி வேறு ஊர்களில் நடக்கும் முப்பெரும் விழாக்களில் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்வது தான் வழக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது, முப்பெரும் விழாவை காணொலிக் காட்சி மூலமாக நடத்துவதால் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. மாவட்டக் கழகங்களுக்கும் தலைவரை வைத்து கூட்டம் நடத்தினோம் என்ற மனநிறைவைத் தந்திருக்கும்.
காணொலி காட்சி மூலமாக நடத்துவதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. இன்றைக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது. 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காணொலி காட்சி மூலமாக இணைக்கப்பட்டுள்ளீர்கள். சுமார் ஐம்பதாயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் இத்தோடு இந்த எண்ணிக்கை முடிவது இல்லை.
இணையதளங்கள், பேஸ்புக் லைவ் மூலமாக பல லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை இப்போது கண்டு கொண்டுள்ளார்கள். கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி நேரலை செய்கிறது. அதில் பல இலட்சம் பேர், இந்த மாநிலம் கடந்து வெளிநாடுகளிலும் காணுகிறார்கள் என்றால் திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழக முப்பெரும் விழா என்பது உலகளாவிய நிகழ்ச்சியாக இன்றைய தினம் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை பரபரப்பாக நடந்து வந்தது. ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக இணைந்து வந்தார்கள்.
இளைஞரணிக்கு நான் ஒரு இலக்கை நிர்ணயித்தேன். அவர்களுக்கு மும்முரமாக உறுப்பினர் சேர்க்கையில் இறங்கினார்கள். இதற்கு மத்தியில்தான் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனவே, உறுப்பினர் சேர்க்கையை இணைய வழியாக மாற்றினோம். கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த முப்பெரும் விழாவில் தான் 'எல்லோரும் நம்முடன்' என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை நான் தொடங்கி வைத்தேன். இன்று அக்டோபர் 11. இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக 11 இலட்சம் புதிய உறுப்பினர்கள் கழகத்தில் இணைந்துள்ளார்கள் என்றால் இது யாராலும் செய்து காட்ட முடியாத வரலாற்றுச் சாதனை ஆகும்.
சூழ்நிலைதான் இலக்கை தீர்மானிக்கிறது - சூழ்நிலைதான் நமது செயல்பாட்டை வடிவமைக்கிறது என்று சொல்வார்கள். கொரோனா காலமானது நமக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு கழகப் பணியை தொய்வில்லாமல் ஆற்றுவது எப்படி என்பதை இந்த உலகத்துக்குக் காட்டிவிட்டோம்.
இன்றைக்கு செல்போன், இண்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ்அப், தொலைக்காட்சிகள், யூடியூப் என ஏராளமான வசதிகள் இருக்கிறது. ஆனால் இத்தகைய வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் கழகத்தை பாடுபட்டு வளர்த்தவர்களுக்குத் தான் இன்றைய தினம் ஆவடி நாசர் அவர்களும் நிர்வாகிகளும் பொற்கிழி வழங்கியுள்ளீர்கள். சுமார் 500 பேருக்கு பொற்கிழி வழங்கி உள்ளீர்கள். இவர்கள் அனைவரும் 5 ஆயிரம் பேருக்கு சமம்.
இன்றைக்கு அவர்களுக்கு பொற்கிழி வழங்கி இருக்கிறோம் என்றால், இவை அவர்களது உழைப்புக்கு தியாகத்துக்கு உண்மையான சன்மானம் ஆகாது. நாம் நம்முடைய நன்றியின் அடையாளமாக இதனை வழங்குகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு மாபெரும் இயக்கம் இலட்சக்கணக்கான தொண்டர்களை உள்ளடக்கியது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் தான் மாவட்டச் செயலாளராக ஆக முடியும். ஆயிரக்கணக்கானவர்கள் தான் பொதுக்குழு உறுப்பினர் ஆக முடியும்.' நூற்றுக்கணக்கில் தான் செயற்குழு உறுப்பினர் ஆக முடியும். 200 பேருக்கும் மேல் தான் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம். 30 பேர் அமைச்சர் ஆகலாம். ஆனால் இலட்ச்சக்கணக்கான தொண்டர்கள் உழைக்கிறார்கள், செயல்படுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள், சிறை செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்?
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன் என்பதைப் பெருமையாகக் கருதும் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பில்தான் கழகக் கோட்டை எழுந்து நிற்கிறது. கழகக் கொடி பிடிப்பதை மட்டுமே கம்பீரமாகவும், பெருமையாகவும் கருதி வாழ்ந்து மறைந்த எண்ணற்ற தோழர்களைக் கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அத்தகைய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாகத்தான் முப்பெரும் விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். தந்தை பெரியார் பிறந்த நாள் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - கழகம் தோன்றிய நாள் - ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்தக் கொண்டாட்டத்தை வடிவமைத்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் இந்த இனத்துக்காக 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தள்ளாத வயதிலும் பாடுபட்டார். பிறக்கும் போதே மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அந்த வசதியை வைத்து அவர் அமைதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் மழை – வெயில், இரவு - பகல் பாராமல் இந்த இனத்துக்காக உழைக்கக் காரணம், இந்த தமிழ்ச் சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதற்காகத் தான் அவர் உழைத்தார். யார் என்ன அவமானம் செய்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்தார்.
அதேபோல் பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் மேதை. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆற்றல் படைத்தவர்களை வெல்லும் ஆற்றல் படைத்தவர். அவருக்கு பல உயரிய பணிகள் காத்திருந்தன. அதை எல்லாம் ஏற்காமல் அரசியல் போராட்டங்களில் முழங்கினார்.
அதேபோல் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அபாரமான கலை, இலக்கியத் திறமை இருந்தது. “தம்பி கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் திரைத்துறையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தால் அங்கும் அவர் தான் முதலிடத்தில் இருந்திருப்பார்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே சொன்னார்கள்.
தந்தை பெரியாராக இருந்தாலும் - பேரறிஞர் அண்ணாவாக இருந்தாலும் - தலைவர் கலைஞராக இருந்தாலும் - தமிழுக்காக - தமிழ் இனத்துக்காக - தமிழ் மொழிக்காக - தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள். அப்படி ஒப்படைப்படைத்து பணியாற்றுவதே தமக்கு இன்பம் என நினைத்தவர்கள். அவர்கள் எந்த இலட்சியத்துக்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ, அந்த இலட்சியத்தை தங்கள் கண்ணுக்கு முன்னால் நிறைவேறுவதைப் பார்த்தவர்கள்.
தந்தை பெரியாரின் கனவுகளை பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் நிறைவேற்றினார்கள். பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார். தலைவர் கலைஞர் அவர்கள் அதனை நிறைவேற்றினார். சுயமரியாதைத் திருமணத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார். பேரறிஞர் அண்ணா அவர்கள் அதனை நிறைவேற்றினார். பெண்கள் சொத்துரிமை பெற வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார். தலைவர் கலைஞர் அவர்கள் அதனை நிறைவேற்றினார். தமிழ் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா கனவு கண்டார். தலைவர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தகுதியை வாங்கித் தந்தார்.
உலகத்திலேயே, ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் ஒரு தத்துவத்துக்காக போராடி - அதற்காக தேர்தலில் நின்று - வெற்றி பெற்று - அந்த தத்துவத்துக்கு அரசியல் அங்கீகாரங்கள் வாங்கித் தந்த வரலாறு திராவிட இயக்கத்துக்கு மட்டும்தான் உண்டு. அத்தகைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்று சொல்லிக் கொள்வதில் அளவுகடந்த பெருமை அடைகிறோம். இதை நினைத்துத்தான் பலரும் பொறாமைப்படுகிறார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதைப் பார்த்தால் தான் திராவிட இயக்கத்தின் வெற்றி, தந்தை பெரியாரின் வெற்றி, பேரறிஞர் அண்ணாவின் வெற்றி, முத்தமிழறிஞர் கலைஞரின் வெற்றி என்ன என்பது தெரியும்?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உத்தரப்பிரதேசமோ, பீகாரோ எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்குத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகள் என்ன என்பது தெரியும். சிலை வைத்தார்கள், பேர் வைத்தார்கள், நினைவு மண்டபம் கட்டினார்கள் என்று சிலர் கொச்சைப்படுத்தலாம்.
ஆனால் தொழில் துறைக்கு, நீர்பாசனத்துறைக்கு, மின்சாரத் துறைக்கு, கல்வித் துறைக்கு, மருத்துவத் துறைக்கு கழக ஆட்சி செய்த சாதனைகளைச் சொல்ல வேண்டுமானால் அதற்குப் பல மணி நேரம் ஆகும். இது திருவள்ளூர் மாவட்டம் என்பதால் இந்த மாவட்டத்தில் மட்டும் தொழில் துறை வளர்ச்சியைச் சொல்கிறேன்.
தமிழகத்தை தொழில் வளர்ச்சி பொங்கிய மாநிலமாக முதல்வர் கலைஞர் அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்கு திருவள்ளூர் மாவட்டமே முக்கிய சான்றாகும். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சென்று சொல்லப்படுகிற சிப்காட் நிறுவனத்தை 1974-ஆம் ஆண்டு உருவாக்கியவரே முதலமைச்சர் கலைஞர் தான். ஒரே இடத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துவதும், அவர்களுக்கு சலுகைகள் தருவதும் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், ஏற்றுமதியை அதிகப்படுத்துவதும் என்ற தொழில் கொள்கையை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள்.
இதன் மூலம் 1974-ஆம் ஆண்டு ஓசூரில் மாபெரும் தொழிற்பேட்டையை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். 1989-ஆம் ஆண்டு ராணிப்பேட்டையிலும் ஓசூரில் இரண்டாம் பிரிவுமாக இரண்டு தொழிற்பேட்டையை உருவாக்கினார்கள். 1996-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் தொழில் வளாகங்களை அமைத்தார்கள்.
அம்பத்தூர் தொழில்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஆல்கலைன் பேட்டரிஸ் தொழிற்சாலை, அரக்கோணத்தில் வார்ப்படம் கொல்லுலை தொழிற்சாலை, தச்சூரில் சதர்ன் போரக்ஸ் லிமிடெட், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பியூட்டின் உற்பத்தி பிரிவு, இருங்காட்டுக் கோட்டையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை, மறைமலை நகரில் ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை, செட்டிபுண்ணியத்தில் பாரத் டெக்ஸ் ஃபேஷன்ஸ் தொழிற்சாலை, கும்மிடிப்பூண்டியில் தாப்பர் டூபாண்ட் தொழிற்சாலை, இருங்காட்டுக்கோட்டையில் டைனமேட்டிக் குரூப் கம்பெனி, கார் கதவுகள் தயாரிக்கும் எ.சி. கம்பெனி, உலோகத்தகடு தயாரிக்கும் டோங்கி விஷன் தொழிற்சாலை, மட்சுசிட்டா ஏர்கண்டிஷன் தயாரிக்கும் தொழுற்சாலை, வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் மேண்டோ ப்ரேக் சிஸ்டம் இந்தியா நிறுவனம், ஆட்டோலெக் நிறுவனம், திருப்பெரும்புதூரில் இன்வோல் மெடிக்கல் இந்தியா லிமிடெட், மார்க்யூப் இந்தியா காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை, செயிண்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை
இப்படி திருவள்ளூர், காஞ்சிபுரம் எல்லையைச் சுற்றிலும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கக் காரணமானது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. முதலமைச்சர் கலைஞரது ஆட்சியில் தான் இவை உருவாக்கப்பட்டன. அதனால்தான் தமிழகத்தை ‘தென்னகத்தின் டெட்ராய்ட்’ என்று சொல்வார்கள். தொழில் வளர்ச்சி, தமிழக வளர்ச்சி, தமிழ்நாட்டு இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைக்கும்வகையில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகக் காரணமானவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
ஒரு தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான அனைத்து சாதகமான விஷயங்களையும் செய்து கொடுத்த ஆட்சி முதலமைச்சர் கலைஞர் ஆட்சி. அதனால் தான் தொழில் துறையில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் தமிழகத்தைக் கொண்டு போய் நிலை நிறுத்தினார் முதலமைச்சர் கலைஞர். ஆனால் இன்றைய நிலைமை என்ன?
சில நாட்களுக்கு முன்னால், ஒரு அறிவிப்பை முதலமைச்சர் செய்திருந்தார். 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்' என்பதான் அந்த செய்தி. இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சியே முடியப் போகிறது. நாற்காலியை விட்டு இறங்கப் போகிறார். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்று சொல்கிறார் என்றால் எந்த நாட்டில் வாழ்கிறார் பழனிசாமி? 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆள்கிறது அதிமுக.
பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? கொண்டு வந்த திட்டங்கள் என்ன? திறந்து வைத்த பெரிய தொழிற்சாலைகள் என்ன? எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள்? ஒரு முறையல்ல, இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினீர்களே? எத்தனையாயிரம் கோடி, எத்தனை லட்சம் கோடி முதலீடு வந்தது? முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் நாடு நாடாகப் போனீர்களே? இதனால் தமிழ்நாடு அடைந்த பலன் என்ன?
எத்தனை தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தீர்கள்? அதற்கு முதலில் பழனிசாமி பதில் சொல்லட்டும். அதன்பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கலாம். முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், பேப்பர் படிப்பது இல்லையா? த்திய அரசு சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதாவது ‘மாநிலத் தொழில் சீர்திருத்த செயல் திட்டம்’ என்ற அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப்பட்டியல் அது.
இதில் 14 ஆவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. பதினான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க யார் வருவார்கள்? இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது மத்திய அரசு. இதைவிட மோசமான ஆட்சிக்கு ஆதாரம் வேண்டுமா? தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. அதுதான் உண்மையான சாதனை.
14 ஆவது இடத்தில் இருப்பது சாதனை அல்ல, வேதனை! எனக்கு முன்னால் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தமிழ்நாட்டின் உரிமையை எந்தெந்த வகையில் எல்லாம் எடப்பாடி அரசு காவு கொடுத்துள்ளது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டார். உரிமையைக் கேட்டால், தனது நாற்காலி பறிபோய்விடும் என்பது பழனிசாமிக்குத் தெரியும். அதனால் தான் அவர் தனது நாற்காலியைக் காப்பதற்காக தமிழ்நாட்டையே டெல்லி பா.ஜ.க.வுக்கு அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி.
கூட்டாட்சித் தத்துவத்தையே மத்திய அரசாங்கம் மதிக்கவில்லை. மாநில அரசுகளை அதிகாரம் பொருந்திய ஜனநாயக அமைப்புகளாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்க வேண்டாமா? ரி வசூலில் மாநிலங்களுக்கு இருந்த உரிமையை ஜி.எஸ்.டி. வரி முறையானது பறித்துவிட்டது. இப்படித்தான் ஆகும் என்பதால் இந்த வரிமுறையையே ஆரம்பத்தில் இருந்து நாம் எதிர்த்தோம்.
மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டை 2022 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசு சரிக்கட்டும் என்றார்கள். ஆனால் கொடுத்தார்களா? இல்லை. பணம் கேட்டால், மாநிலங்களுக்கு கடனாக தருகிறோம் அல்லது மாநில அரசுகள் யாரிடமாவது கடன் வாங்கிக் கொள்ளட்டும் என்கிறது மத்திய அரசு. இது மத்திய அரசா? அல்லது கந்துவட்டி அரசா? மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் தானே இந்தியா? அப்படியானால் மாநில உரிமைகளை மறுப்பது ஏன்? மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயைத் தடுத்து, அவர்களே கொண்டு போய்விட்டு, மாநிலங்களை பிச்சை எடுக்க வைப்பது ஏன்? இதை எல்லாம் பழனிசாமி கேட்க மாட்டார். அவருக்கு பன்னீர்செல்வத்தோடு சண்டை போடுவதிலேயே காலம் ஓடிவிட்டது. அவர் எங்கே மத்திய அரசோடு சண்டை போடப்போகிறார்?
இதனைத் தமிழகம் எதிர்க்காவிட்டாலும், சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. அந்த மாநிலத்தை ஆள்வது முதுகெலும்பு உள்ள முதலமைச்சர்கள். இங்கே ஆள்வது மண்புழு முதலமைச்சர் என்பதால் அவரால் எழுந்து நிற்கவே முடியவில்லை. ஆனால் கொரோனா காலத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி வரைக்கும் தமிழக அரசு கடன் வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனா காலத்திலும் கடன் வாங்குவதை பழனிசாமி நிறுத்தவில்லை. மக்களுக்கு உதவி செய்வதற்காக கடன் வாங்கவில்லை. கொள்ளையடிக்க கடன் வாங்கி உள்ளார்கள். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சொல்கிறேன். ஆனால் தரவில்லை. ஏன் தரவில்லை? பணமில்லையா? பணம் இருக்கிறது? ஆனால் மனமில்லை! அதுதான் உண்மை. சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக சில ஆயிரம் கூட தரத் தயங்கும் பழனிசாமி, தனது ஆட்சியைத் தக்க வைக்க பல நூறு கோடிகள் செலவு செய்யத் தயாராக இருக்கிறார். தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக ஆக்குவதில்தான் பழனிசாமி சாதனை செய்துள்ளார்.
கொரோனாவை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. கொரோனாவால் இறந்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. சென்னையில் மட்டும் 3396 பேர் நேற்றுவரை இறந்து போயிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதலமைச்சர்? திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 576 பேர் இறந்துள்ளார்கள். 576 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. என்ன சொல்லப் போகிறார் முதலமைச்சர்?
தினமும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். 5 ஆயிரம் என்பது என்ன எண்ணிக்கை என்பது தெரியவில்லை. அது 6 ஆயிரமாகவும் ஆகவில்லை. 4 ஆயிரமாகவும் ஆகவில்லை. 5 ஆயிரம் பேர் என்று உத்தேசமாக ஒரு கணக்கைச் சொன்னால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரே ஒரு ஆள் பாதிக்கப்பட்டாலும் அம்மாவின் அரசு காப்பாற்றும் என்றார் பழனிசாமி. பத்தாயிரம் பேர் இறந்து போனதற்கு பழனிசாமி என்ன பதில் வைத்துள்ளார்? கொரோனாவுக்குத் தான் தெரியும் என்று சொல்லப் போகிறாரா?
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடத்தில் இருக்கிறது. முதலில் சென்னை, அடுத்தது செங்கல்பட்டு, அடுத்து கோவை, அடுத்தது திருவள்ளூர் தான். இதுவரை 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு அதிகமாகும், நவம்பரில் அதிகமாகும் என்று அதிகாரிகளே பேட்டி தருகிறார்கள். அதிகமாகும் என்றால் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் என்ன செய்தது? செய்யப் போகிறது? கொரோனாவை தடுக்கிறோம் என்ற பெயரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் அதிகமானதே தவிர கொரோனா குறையவில்லை.
கொரோனாவால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் தான் குறைவு என்பதை ஏதோ தன்னுடைய சாதனையைப் போல பழனிசாமி சொல்லிக் கொண்டு இருந்தார். உண்மை அதுவல்ல. மரணம் அடைந்தவர் எண்ணிக்கையையே மறைத்து தனக்குத்தானே மரண சாதனைப் பட்டத்தைப் பழனிசாமி சூட்டிக் கொண்டார். ஆனால் இன்றைய நிலைமை என்ன? கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 1.1 விழுக்காடாக இருந்த இறப்பு விகிதம் அண்மைக் காலமாக 1.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மற்ற நோய்ப் பாதிப்பு இல்லாத பலரும் இறந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. இதுதான் மக்களைக் காக்கும் அழகா? கொரோனா அதிகரித்துக் கொண்டே போனால்தான் கொள்ளையையும் தொடர முடியும் என்று நினைக்கிறதா தமிழக அரசு என்ற சந்தேகம் தான் வருகிறது. மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 8 முறை ஊரடங்கை நீட்டித்துள்ளார்கள். 200 நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உள்ளது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் இது கையாலாகாத அரசாங்கம், என்று தானே அர்த்தம்?
இப்படி மக்களைப் பற்றிக் கவலைப்படாத பழனிசாமியை விமர்சித்தால், நான் விவசாயி என்று நித்தமும் புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த விவசாயி செய்ததெல்லாம் விவசாயத்துக்கு துரோகமும் விவசாயிகளுக்கு துரோகமும் தான்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்ததை விட பெரிய துரோகம் எதுவும் தேவையில்லை. குறைந்தபட்ச ஆதாரவிலை கூட இல்லாத மூன்று சட்டங்களை முட்டிக்கால் போட்டு ஆதரிக்கும் இதுதான் விவசாயி ஆட்சியா? விவசாயிகளுக்கு கிசான் திட்டப்படி வழங்கப்படும் நிதியில் 100 கோடி ரூபாய் வரைக்கும் மோசடி நடந்துள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இந்த மோசடி அதிகமாக நடந்ததும் முதலமைச்சரின் சேலம் மாவட்டத்தில் தான். இதுதான் விவசாயி ஆட்சியா?
சில நாட்களுக்கு முன்னால் பயிர்க்கடனில் நடந்த மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதுதான் விவசாயி ஆட்சியா? விளைந்த நெல்லை ஒழுங்காக, முறையாக, முழுமையாக கொள்முதல் செய்யாமல் அவை தேங்கிக் கிடக்கிற காட்சியை சில வாரங்களாக பார்க்கிறோம்.
நெல்லை மூட்டை கட்டுவதற்கு சாக்கு இல்லை, கம்யூட்டர் வேலை செய்யவில்லை, அதிகாரிகள் இல்லை என்று ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் விவசாயி ஆட்சியா? மேகதாது அணையைத் தடுக்கத் தைரியம் இல்லாத இவர் நடத்துவதுதான் விவசாயி ஆட்சியா? தருமபுரி முதல் திருவண்ணாமலை வரை போராடும் விவசாயிகளை கைது செய்த இதுதான் விவசாயி ஆட்சியா?
இது விவசாயி ஆட்சி அல்ல.
விவசாயிகளைக் கொல்லும் ஆட்சி.
விவசாயத்தைக் கொல்லும் ஆட்சி.
விவசாயியாக நடிப்பவரின் ஆட்சி.
இந்த நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இறந்து போனதால் கூவத்தூரில் காலில் தவழ்ந்து பதவியைப் பெற்றவர் பழனிசாமி. பா.ஜ.க.வின் காலில் கிடந்து அதனை தக்க வைத்துக் கொண்டவர் பழனிசாமி.
எனவே இவர் முதலமைச்சர் ஆவதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவும் இல்லை. வாக்களிக்கப் போவதும் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் இருக்கும் காலம் வரை சுருட்டிக் கொண்டு ஓடுவதற்கு தயாராகி விட்டார்கள். இவர்கள் எங்கும் தப்ப முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும் போது இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்து என் உரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன். வணக்கம்.” இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.