எதிர்க்கட்சிகள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்புக்கிடையே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவசாய விரோத வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது பா.ஜ.க அரசு.
விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளைப் படுகுழியில் தள்ளும் பா.ஜ.க அரசின் முயற்சிகளுக்கு துணைபோகும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்ற அடிப்படையில், கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
கேரள அரசு, மாநில உரிமைகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்திடப் பாடுபடும் அரசு; வேளாண் சட்டங்களில் பொதிந்துள்ள விபரீதத்தை விளங்கிக் கொண்டுள்ள அரசு.
இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே!? எடப்பாடி அரசு - அது மாநில உரிமைகளைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலனைத் தவிர, வேறு எதுகுறித்தும் சுரணை இல்லாத அரசு; விவசாயிகளைப் பற்றியோ, வேளாண் சட்டங்களினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ, துளியும் கவலைப்படத் துப்பில்லாத அரசு!” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.