மு.க.ஸ்டாலின்

அறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு வரும் ஆபத்தை நொறுக்க கிளர்ந்தெழ வேண்டும் - பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு ஆபத்து வந்துக் கொண்டிருக்கிறது என சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு வரும் ஆபத்தை நொறுக்க கிளர்ந்தெழ வேண்டும் - பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரின் இன்று (15-09-2020) போது அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு:

“வங்க கடலோரத்தில் ஆறடி சந்தனப்பேழையில் உறங்கியும், உறங்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய அறிவுலக மேதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் இன்று.

இதே சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கையை, மாநில சுயாட்சியைத் தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அந்த தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிய தலைவர் நம்முடைய அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா அவர்களால், கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானங்களுக்கு தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில் நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, அவரது பிறந்தநாளில் அனைவரையும் கேட்டு என்னுடைய துணைக் கேள்வியைத் தொடுக்க விரும்புகிறேன்.

அறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு வரும் ஆபத்தை நொறுக்க கிளர்ந்தெழ வேண்டும் - பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

என்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நேர்மை நகரில், 33 /11, துணை மின் நிலையம் 13/10/2018 அன்று பணி துவங்கப்பட்டது. அந்தப் பணி முடிக்கப்பட வேண்டிய நாள் 21/7/2019. நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த பணியை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினேன்.

ஆனால் இன்னும் அந்தப் பணி முடிவுற்று செயல்பாட்டுக்கு வரவில்லை. என்னுடைய தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகரிலும் 230/33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தச் சட்டமன்றத்தில் பலமுறை நான் எழுப்பி இருக்கிறேன். அந்தப் பணியும் இன்னும் தொடங்கப்படவில்லை.

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களும், நடுத்தர வகுப்பினரும் அதிகம் வசிக்கின்ற இந்த இரு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இதுவாகும். எனவே தடையில்லா, சீரான மின்சாரம் பெறுவதற்கும், நேர்மை நகரின் துணை மின்நிலையத்தின் பணியை விரைந்து முடித்திடவும், கணேஷ் நகரின் துணைமின் நிலைய பணியை விரைந்து தொடங்கிடவும் இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பேசிய விவரம் வருமாறு:

“அரியலூர் அனிதா முதல், இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் "நீட்" தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள்.

"நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம். இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக - மாணவச் செல்வங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை.

செப்டம்பர் 12-ம் தேதி - அதாவது "நீட்" தேர்வுக்கு முதல் நாள் மட்டும் - ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். “I am sorry. I am tired” என்று மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின்- ஆடியோ வாய்ஸ் ஒட்டுமொத்த தமிழக “மாணவர்களின் வாய்ஸ்” என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

இதற்கிடையில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது. புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது.

பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப் போன மாணவர்களும் தவித்துள்ளார்கள். இந்தி வழிகாட்டுதல்கள்- மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி - தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தேர்வு தேவையா?

ஆகவே தமிழகச் சட்டமன்றத்தையும் - தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத - நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கண்டித்தும் கண்டனத் தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணயாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள்.

banner

Related Stories

Related Stories