இன்று (29-7-2020), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் - தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், பேரூர்க் கழகச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார்.
அப்போது, தி.மு.க தலைவர் அவர்களிடம், ஊரடங்குக் காலத்தில் அப்பகுதி மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்தும், கழகத்தின் சார்பில் நடைபெற்றுவரும் கொரோனா நிவாரணப் பணிகள் குறித்தும் கழகத்தினர் தெரிவித்தனர். கழகத் தலைவர் அவர்கள், அதுகுறித்து விசாரித்தறிந்து, ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம் - கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுருவின் திருவுருவப் படத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, அவரது குடும்பத்துக்கு கழகத்தின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை வருமாறு :
திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் - பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட- சொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.பரமகுரு பி.எஸ்.சி. பி.எல். அவர்களின் திருவுருவப்படத்தை மிகுந்த வேதனையுடன் திறந்து வைத்துளேன்.
இந்த மாதத்திலேயே ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., எல்.பலராமன், கே.பி.பி. சாமி எம்.எல்.ஏ., காத்தவராயன் எம்.எல்.ஏ., ஆகியோரது திருவுருவப் படங்களை நான் திறந்து வைத்திருந்தாலும், இது அதிக வேதனையைத் தருவதாக உள்ளது.
அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இயற்கை மரணம் எய்தினார்கள். ஆனால் நம்முடைய சகோதரர் பரமகுரு, மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால்தான் இது அதிக வேதனை தருகிறது என்று நான் சொன்னேன்.
மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலகுருவின் முகத்தைப் பார்க்கும் போது வேதனை அதிகமாகிறது.
நாற்பது வயதில் - வாழ்வின் வசந்தம் வீசும் வயதில் பாலகுரு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஷீபாவை திருமணம் செய்து கொண்ட பரமகுருவுக்கு எட்டு வயதில் ரோசன் என்ற மகனும்- மூன்று வயதில் சிருமித்தா என்ற மகளும் இருக்கிறார்கள். ஷீபாவுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.
எவ்வளவோ கனவுகளோடு பரமகுருவை வாழ்க்கைத் துணைவராக அவர் ஏற்றுக் கொண்டிருப்பார். இவர்களது கனவைச் சிதைத்து விட்டார்கள் கொலைகாரர்கள்.
விவசாயம் பார்த்துக் கொண்டே வழக்கறிஞர் தொழிலையும் பார்த்து வந்துள்ளார் பரமகுரு.
தனது சொந்த செல்வாக்கின் காரணமாக பொதுத்தொகுதியில் வென்று ஊராட்சித் தலைவராக ஆகி இருக்கிறார் பரமகுரு என்று கேள்விப்பட்டபோது உண்மையில் நான் பெருமைப்பட்டேன்.
கழகத்தைச் சேர்ந்த தம்பிமார்கள், அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் பெற்ற சேவகர்களாகத் திகழ்ந்து வருவதைப் பார்த்து நான் பெருமைப்பட்டேன்.
நான் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது நடத்திக் காட்டிய ஊர்வலங்களில் வெண்சீருடை அணிந்து பரமகுரு கலந்து கொண்டுள்ளார்.
கழகம் அறிவித்த எந்த ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், போராட்டமாக இருந்தாலும் அதில் தவறாமல் பங்கெடுத்தவர் பரமகுரு.
கழகப் பணியையும் பொதுச்சேவையையும் துடிப்போடு நடத்திக் காட்டியவர் பரமகுரு. எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் செயல்படக்கூடிய தீரனாக பரமகுரு செயல்பட்டுள்ளார். அதுவே அவரது உயிரையே பலிவாங்கி விட்டது.
கடந்த 14ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் பரமகுரு படுகொலை செய்யப்பட்டார் என்று மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்கள் என்னிடம் சொன்னபோது, அதிர்ச்சி அடைந்தேன். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகி விட்டது.
மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. யாருமே வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் ஊரடங்கு போடுகிறது. ஆனால் குற்றவாளிகள் மட்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
தனது ஊராட்சியில் போடப்படும் சாலைப் பணிகளைப் பார்வையிட பரமகுரு சென்றுள்ளார்.அவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்கள். இந்த நாட்டில் ஊராட்சி பிரதிநிதிகளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை.
அப்பகுதியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளைக்கு எதிராக பரமகுரு குரல் கொடுத்து வந்திருக்கிறார். சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கொசவன்பாளையம் கூவம் ஆற்றங்கையோரம் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அதனை பரமகுரு தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்பகுதி மக்களே சொல்கிறார்கள். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதும் - மக்கள் பிரதிநிதிகள் கொலை செய்யப்படுவதும் தான் எடப்பாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணப்படும் இலட்சணமா?
ஒருபக்கம் மக்கள் கொரோனாவில் மரணம் அடைகிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் பிரதிநிதிகள் சமூகவிரோதிகளால் கொலை செய்யப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு ரத்தம் கக்கும் நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி சில நாட்களுக்கு முன்னால் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
உடனே சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக இயங்குவதாகவும் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும் பதில் அறிக்கை வெளியிட்டார்.
காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உண்மைதான். யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுதான் கேள்வி. இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னால் கடலூர் அருகே உள்ள கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் - காளையார்கோயில் அருகில் உள்ள முடுக்கூரணி என்னும் ஊரில் இராணுவ வீரர் ஒருவரின் தாயார் ராஜகுமாரி, அவரது மனைவி சினேகா ஆகியோர் கொலை செய்யப்பட்டு - அவர்களின் 7 வயதுக் குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மற்றும் காலில் கிடந்த கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி கல்வினை கிராமம் பகுதியில் 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சமுதாயப் பிரச்சினைகளைத் தட்டிக்கேட்ட சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் செல்வராஜ் நகரில் மகேந்திரன் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? குற்றவாளிகள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்களா? என்பதுதான் மக்கள் மனதில் உள்ள கேள்வியாகும்.
மக்களை ஒருவிதமான அச்சத்திலும்- பதற்றத்திலும் இந்த அரசு வைத்துள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, உயிருக்கு உத்தரவாதம் இல்லை. குற்றவாளிகள் அச்சமில்லாமல் குற்றங்களைச் செய்து வருகிறார்கள். இதை விட மோசமான அரசு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்கிற அளவுக்கு எடப்பாடி பழனிசாமியின் அரசு செயல்பட்டு வருகிறது.
பரமகுருவின் படுகொலைக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை நம்முடைய சட்டப் போராட்டம் தொடரும்.
பரமகுருவின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை கழகம் வழங்கும். அவரது குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு. பரமகுருவின் இரண்டு குழந்தைகளும் நன்கு படித்து உயர்ந்த இடத்தைப் பெற அனைத்து உதவிகளையும் செய்வோம்.
மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்குச் சேவையாற்றும் போது தங்களது பாதுகாப்பிலும் கவனமாக இருக்க வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்கும்போது கூட்டமாக இருந்து செயல்களைச் செய்ய வேண்டும்.
இது கொரோனா காலம் என்பதால் உடல்நலனிலும் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் பரமகுருவின் தியாகத்தை மறக்காது, அவரைப் படுகொலை செய்த குற்றவாளிகளை மன்னிக்காது.
பரமகுருவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் உரையாற்றினார்.