மு.க.ஸ்டாலின்

EIA2020 : “கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கார்பெட் விரிக்கும் மோடி அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

EIA2020 : “கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கார்பெட் விரிக்கும் மோடி அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“கார்ப்பரேட்டுகளுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என திராவிட முன்னேற்றக் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

நாடாளுமன்றம் கூடாத “சுகாதார பேரிடர்” கால நெருக்கடியைப் பயன்படுத்தி - பல்வேறு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, புதிய “சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020”-யை வெளியிட்டிருப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே இருக்கும் 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் கை கொடுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்த புதிய வரைவு அறிக்கை கொண்டு வந்திருப்பது சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ ரத்து செய்வதற்குச் சமமான அநீதியாக உள்ளது.

1972-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “மனித சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு பிரகடனத்தின்” அடிப்படையில், “சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அடிப்படைக் கடமை” (Fundamental Duty) என்பது 1976-ல் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் “போபால்” துயரத்திற்குப் பிறகு - “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986” நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

EIA2020 : “கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கார்பெட் விரிக்கும் மோடி அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

ஆனால், “இருக்கிற சட்டங்களையும் மதிப்பதில்லை; மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களையும் கொண்டு வருவதில்லை” என்பதில் தீர்மானமாக இருக்கும் மத்திய பா.ஜ.க.அரசு, சுற்றுப்புறச்சூழலுக்கு ஆபத்தாக உள்ள பல்வேறு திட்டங்களை “மறுவகைப்படுத்தி”- அதுபோன்று ஆபத்து விளைவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை” என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

“பொதுமக்கள் கருத்துக் கேட்பு” என்பது வெறும் காகிதப்புலியாக்கப்பட்டு - தங்களின் இயற்கை வளத்தை - வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை மக்களிடமிருந்து அடியோடு பறிக்கப்பட்டுள்ளது.

மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மளமளவென பெருகவும் - விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி சாலை அமைக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் - மாநில உரிமையைப் பறித்து நவீன நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், “திட்டம் துவங்கும் முன்பே” பெற வேண்டிய “சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி தேவையில்லை” என்று புதிய அறிவிக்கை “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு” ‘கார்ப்பெட்’ விரித்துள்ளது.

பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரம் - நலன் இரண்டும் காற்றில் பறக்கவிடப்பட்டு - அவசர கதியில் இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை உறுதி செய்ய - கொரோனா காலத்தில் - குறிப்பாக நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கருத்துக் கேட்கிறது என்றால் எத்தகைய கொடுமையான நிர்வாக நடவடிக்கை இது?

கொரோனா காலத்தில் கூட மத்திய பா.ஜ.க. அரசின் கவனம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதிலும் - அவர்களுக்கு செவ்வனே கடமையாற்றுவதிலுமே இருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது.

EIA2020 : “கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கார்பெட் விரிக்கும் மோடி அரசு” - மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் திருமதி. பிருந்தா காரத் அவர்கள், “இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநியாயமானது” என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சரும் தற்போது அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்றக்குழுத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், “இந்த அறிவிக்கை சுற்றுப்புறச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறையற்ற செயல்” என்று விமர்சித்து விட்டு, “மாநில சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவப்பெட்டியில் தள்ளி அடிக்கும் கடைசி ஆணி” என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்.

அந்த அளவிற்கு மத்திய - மாநில உறவுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் - சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் மாநிலங்களைப் புறக்கணிக்கும் விதத்திலும் இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள்- இந்த அறிவிக்கை திரும்பப் பெற வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியுள்ள நேரத்தில், “இந்த அறிவிக்கை மீதான கருத்துக் கேட்பிற்குக் கால அவகாசம் வழங்கி, அறிவிக்கையை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்றமே மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆகவே நாடே கொந்தளிக்கும் “சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020 மக்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல” என்ற குரல் எங்கும் இன்றைக்கு எதிரொலிக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்களும், விவசாயிகளும் போராடி வரும் நிலையில் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று தமிழகமே ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அ.தி.மு.க. அரசின் ஒத்திசைவுடன் மத்திய அரசு ஒவ்வொரு திட்டமாக அனுமதித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” – அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்திருப்பது, “மெஜாரிட்டி” இருக்கிறது என்பதற்காக - அதைத் துஷ்பிரயோகம் செய்யும் முறையில் மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டுள்ள - மக்கள் விரோத சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையாகவே இருக்கிறது.

மக்களின் நலனோ - சுற்றுப்புறச்சூழல் பற்றிய கவலையோ இந்த அரசுக்கு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் போதும் - அதுவும் வரம்புகளை - எல்லைகளை மீறி நாம் சலுகை காட்டினாலும் யார் கேட்க முடியும்? என்ற “சர்வாதிகார” மனப்பான்மையுடன் தங்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது; வாக்களித்த பெருமக்கள் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆகவே சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020-ஐ ஏற்கனவே உள்ள 2006, அறிவிக்கையை விடக் கடுமையாக்கி - நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில் - இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு - மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த ஜனநாயக நடைமுறை இயலாது என்று பா.ஜ.க. அரசு கருதுமேயானால் - கொரோனா காலத்தில் இந்த அறிவிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்கும் முடிவினை உடனடியாகக் கைவிட்டு - அறிவிக்கையைத் திரும்பப் பெற்று - நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் முழு விவாதம் நடத்தி - சாதக பாதக அம்சங்களை நன்கு ஆராய்ந்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

“நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சி வேண்டும்” – ஆனால் அதே நேரத்தில், “ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வுரிமை” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மனதில் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories