கழகச் செயல்வீரர் ஜெ.அன்பழகன் மக்கள் பணிசெய்து மறைவெய்திய நிலையில், அவர்தம் நினைவுகளைக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
"மாவீரன் அன்பழகனுக்கு வீர வணக்கம் !" எனக் குறிப்பிட்டு அவர் வரைந்துள்ள மடல் பின்வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் மடல்.
தூய சுயமரியாதை உணர்வும், சொல்லிலும் செயலிலும் துணிவும் உறுதியும் கொண்ட நம் ஆருயிர்ச் சகோதரர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள், மக்கள் பணிக்குத் தன் இன்னுயிர் தந்து நம் கண்களைக் கடலாக்கி, நெஞ்சத்து வானத்தில் என்றும் மறையாத சூரியனாகச் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார்.
அவரைப் பற்றி எத்தனையெத்தனையோ நினைவுகள்... எண்ணிலடங்கா நிகழ்வுகள்..!
மிசா சிறைக்கொட்டடியில் கழக முன்னணியினருடன் நான் அடைக்கப்பட்டிருந்தபோது சிறைக் கொடுமைகளை அனுபவித்த கழக தளகர்த்தர்களில் ஒருவரான பழக்கடை ஜெயராமன் அவர்களின் அருமை மகன்தான் ஜெ.அன்பழகன். இன்னொரு மகன் பெயர், கருணாநிதி. உயிரிலும், உடலின் ஒவ்வொரு அணுவிலும் கழகம் இரண்டறக் கலந்திருப்பதை - நிறைந்திருப்பதை எடுத்துக் காட்டும் திருப்பெயர்கள் இவை.
நெருக்கடி நிலை காலத்தில், தந்தையைத் தேடி வந்த காவல்துறையினர், மகன் அன்பழகனை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற கொடூரமெல்லாம் அப்போது நடந்தது. இளமைப் பருவம் முதலே இயக்கப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட உடன்பிறப்பு அவர்!
தலைவர் கலைஞர் அவர்களை இயக்கத்தின் தலைவராகவும், இதயத்தில் தந்தையாகவும் வைத்துக் கொண்டாடியவர். தன் பெயரில் உள்ள அன்பை, அப்படியே முழுமையாக என் மீது காட்டியவர்.
கழகத்தின் நலனுக்காக, உரிமையுடன் உரையாடக்கூடியவர். கழகத்தின் நன்மையன்றி வேறெதுவும் அவர் சிந்தையில் இருந்ததில்லை. இளைஞரணிச் செயலாளர் பொறுப்பினை நான் ஏற்றிருந்தபோது, சென்னை தியாகராயர் நகர்ப் பகுதியில் பல நிகழ்ச்சிகளைப் பாராட்டிப் போற்றத் தக்க வகையில் நடத்திக் காட்டியவர். 1996-ல் கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, தன் உடல்நலன் காரணமாக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய ஜெ.அன்பழகன், முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று, என்னிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வைப் பதிவு செய்த அந்தப் புகைப்படம், இப்போது பார்க்கும்போது கண்களைக் கசியச் செய்கிறது. உடல்நலனைவிட இயக்க நலனே உயர்வானது, முதன்மையானது எனச் செயல்பட்டவர்.
சென்னை மேயராக நான் பொறுப்பு வகித்தபோது, தியாகராயர் நகர்ப் பகுதிக் கழகச் செயலாளர் என்ற முறையில், தனது பகுதிக்கான திட்டங்களை முன்வைத்து, செயலாற்றியவர் அவர். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லமும், அவர் உயிராகக் கருதிய அண்ணா அறிவாலயமும், என்னை நான்கு முறை சட்டப்பேரவைக்கு அனுப்பிய ஆயிரம்விளக்கு தொகுதியும், ஜெ.அன்பழகன் பொறுப்பு வகித்த மாவட்டக் கழகத்தின் நிர்வாகத்தில் வரக்கூடியவை. அதனால் தேர்தல் களம் என்றாலும், அறிவாலய விழா என்றாலும், அவர் மாவட்ட நிர்வாகத்துக்குள் கழகம் நடத்துகின்ற நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், தலைவர் கலைஞர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதனைவிட ஒரு படி மேலே போய், கூடுதலாகச் செயலாற்றிடும் ஆற்றல் அவருக்கு உண்டு.
ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் அண்ணா அறிவாலயத்தை, தலைமைச் செயலகத்தை, நாடாளுமன்றக் கட்டடத்தை, கோபாலபுரத்தில் நூலகத்துடன் கூடிய தலைவரின் வரவேற்பறையை இப்படி எண்ணற்ற வடிவில் மேடை அலங்காரங்களை ஓவியர்களைக் கொண்டு அப்படியே உயிரோட்டத்துடன் வடிவமைத்துக் காட்டி, தலைவர் அவர்களின் பாராட்டுகளைப் பெற்று, உடன்பிறப்புகளின் மனதில் நிலைத்தவர் ஜெ.அன்பழகன்.
2001-ம் ஆண்டுத் தேர்தலில் தியாகராயர் நகர் தொகுதியிலிருந்தும், 2011, 2016 தேர்தல்களில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியிலிருந்தும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மூன்று முறையும் கழகம் எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்தபோதும், ஆளுந்தரப்பின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், பேரவையில் துணிவுடன் உரிமைக் குரல் எழுப்பியவர்.
அவையில் இல்லாதோர் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற மரபினை மதிக்காத அ.தி.மு.க., வினர், திட்டமிட்டே - வேண்டுமென்றே நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து வன்மத்துடன் பேசும்போது, சிங்கமென ஒரு குரல் சட்டப்பேரவையில் உடனடியாகச் சிலிர்த்தெழும் என்றால், அது அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகனின் குரல்தான்.
தலைவர் பற்றி ஒரு சொல்கூட தரக்குறைவான முறையில் மாற்றாரால் உச்சரிக்கப்படுவதை அவர் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார். தலைவர் கலைஞர் கற்றுத்தந்த கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடமையாகக் கருதி, எங்களைப் போன்றவர்கள் அமைதி காத்திடுவோம். ஆனாலும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்கிற தலைவர் கலைஞரின் வசனம் போல, கலைஞரைப் பற்றிச் சொன்னவர்களை, 'கலைஞர் கற்றுத் தந்த பண்புகள் தடுத்தாலும் விடமாட்டேன்' என வெகுண்டெழுந்து, தன் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்வார்.
அதனாலேயே அவர், பேரவையிலிருந்து பல முறை வெளியேற்றப்பட்டிருக்கிறார். கூட்டத்தொடர் முழுவதும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.
அதனால், அவர் பேசும்போது, பேராசிரியர் பெருந்தகையோ அல்லது நானோ அவரிடம் அமைதி காக்கச் சொல்லி வலியுறுத்தினால், உடனே அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தலைமைக்குக் கட்டுப்படக்கூடிய தகவமைந்த தொண்டராகச் செயல்படுவார். தனது தொகுதி மக்களுக்கான தேவைகளையும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலவரங்களையும், சளைக்காமல் எடுத்துரைப்பதில் தயக்கம் காட்டாதவர்.
கழகம் நடத்திய போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, சிறை செல்லத் தயங்காதவர். அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டபோது, அவரை விடுவிக்கக் கோரி, எழும்பூரில் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக தலைவர் கலைஞர் அவர்களே போராட்டக் களம் கண்டார் என்கிற பெருமைமிகு வரலாறு ஜெ.அன்பழகன் அவர்களுக்கு உண்டு.
தலைமை மீது தொண்டருக்கும், தொண்டர் மீது தலைமைக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளை, இயக்கமே ஒரு பெருங்குடும்பமாக உறவுகொண்டுள்ள தி.மு.கழகத்தில் அன்றி, வேறெங்கு காண முடியும்?
இந்தக் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், முன்னேற்பாடுகளின்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த ஏழை மக்களின் பசித்துயர் போக்கிட தி.மு.கழகம் களமிறங்கிச் செயலாற்றியது.
போதிய பாதுகாப்புடன் - இடைவெளி காத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்களது உடல்நிலை கருதி நானும் கழக முன்னணியினரும் ஓய்வெடுக்க வலியுறுத்தினோம். அவரோ, என் மீது கொண்டிருந்த ஆழமான அக்கறையால், “நீங்கள் சிரமப்படவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்’‘ என ஓயாமல் பணியாற்றினார்.
எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் இயக்கமான தி.மு.கழகத்தின் அந்தக் களச் செயல்வீரன், மக்களின் பசி போக்கி, பட்டினிச்சாவினைத் தடுத்திடும் பணியில் அயராது ஈடுபட்டார். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்த போதும், ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளின் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு, ஜூன் 2-ம் தேதி குரோம்பேட்டை - ரேலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடும் உயிர்ப் போராட்டம் நடத்தினார்.
மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலன் பற்றி மருத்துவர்களிடம் கேட்டேன். தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளை ஏற்று, சளைக்காத போராளியாக ஜெ.அன்பழகன் அவர்கள் இருப்பதை அவர்கள் எடுத்துச் சொன்ன போது, எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
ஆனால் நேற்று (ஜூன் 10) அதிகாலையில் வந்த செய்தி, இடிபோலத் தாக்கியது.
கடைசிக்கட்டப் போராட்டத்தில் சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள் இருக்கிறார் எனத் தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். மருத்துவர்கள், நிலைமையைத் தெரிவித்தனர். என் நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்தன. சிறிது நேரத்தில், நம் எல்லோரையும் விட்டுப் பிரிந்துவிட்டார் அன்புக்குரிய உடன்பிறப்பு அன்பழகன்.
இல்லை... இல்லை... அவர் பிரியவில்லை.
ஒரு பேரிடர் நேரத்தில், தன்னைப் பற்றியோ தனது உடல் நலன் பற்றியோ கவலைப்படாமல், களத்தில் நின்ற மாவீரனாக மக்கள் மனதில் நெடிதுயர்ந்து வாழ்கிறார்!
தியாகச் சுடராக, அவரது குடும்பத்தில் மட்டுமல்ல; கழகத்தினர் இல்லங்களில் எல்லாம் ஒளி விடுகிறார்!
சுயமரியாதைச் சுடராக நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறார்!
அவர் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்.
கடலில் புதைக்கப்பட்ட மாலைச் சூரியன், காலையில் ஒளிப்பிழம்பாய் உயிர்த்தெழுந்து வருவதுபோல, நம் இதயமெங்கும் அன்பழகன் ஒளிவீசுகிறார். காலந்தோறும் கழகமே உயிர்மூச்சு என வாழும் சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்களின் குடும்பத்திற்குக் கழகத் தலைமை என்றும் துணை நிற்கும்.
உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே... உங்களில் ஒருவனான நான், நம் அனைவரின் சார்பிலும் அண்ணா அறிவாலயத்தில் சகோதரர் ஜெ.அன்பழகனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவிய நிகழ்வில் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர். அங்கே அவர் படமாக மட்டுமில்லை; நமக்கெல்லாம் இலட்சியப் பாடமாக - கழகத்தின் வரலாற்றில் ஒன்றி நிலைத்திருக்கிறார்.
நெருக்கடிகள் - இடர்ப்பாடுகள் - சூறாவளிகள் - சுனாமிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு நிலைத்திருக்கும் இந்த இயக்கத்தின் அடித்தளமே ஜெ.அன்பழகன் போன்ற செயல்வீரர்கள்தான். பிறந்தநாளிலேயே மரணம் எய்திய அவர், பல உடன்பிறப்புகளின் மனதில் புதிய வலிமையை ஊட்டியிருப்பதைக் காண்கிறேன். அவர்களின் உணர்வில், ஜெ.அன்பழகன் அவர்களை உயிர்ப்புடன் காண்கிறேன்.
ஒவ்வொரு உடன்பிறப்பும் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குகின்ற அதேவேளையில், மக்களுக்கான நம் பணியினைத் தொடரும்போது, இந்த நோய்த்தொற்று காலத்தில், மிகுந்த பாதுகாப்புடன், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் ஒவ்வொரு உடன்பிறப்பும் செயல்படவேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகிறேன்.
மக்களுக்கான தியாக இயக்கம் தி.மு.கழகம் என மரண சாசனம் எழுதிச் சென்றிருக்கும் மாவீரன் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்!”