"ஒன்றிணையும் உள்ளங்கள்; உதவும் கரங்கள்!"
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கொரோனா நோய்த் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு, 45 நாட்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகள் வலியுறுத்தும் கட்டுப்பாடுகளை நாமும் கடைப்பிடித்து, மக்களையும் கடைப்பிடிக்கச் செய்து, தனிமைப்படுத்தல் மூலம் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைத் தொடக்கம் முதலே தி.மு.கழகம் வலியுறுத்தி வருகிறது. மத்திய - மாநில அரசுகளே கொரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்படைவதற்கு முன்பாக, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இதன் ஆபத்தை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்தது கழகம்.
ஊரடங்குக்கு முன்பாகவே கொளத்தூர் தொகுதியில் உள்ளவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், கை கழுவும் கரைசல் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவப் பெட்டகத்தை தி.மு.க.,வின் சார்பில் வழங்கினேன். 'முன் ஏர் செல்லும் வழியில் மற்ற ஏர்களும் தொடர்ந்து வருவதைப் போல', கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் இதுபோன்ற தற்பாதுகாப்புப் பெட்டகங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினர். கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலத்தே களப்பணியில் இறங்கி, மக்களுக்குத் துணை நின்றனர்.
'வருமுன் காப்போம்' என்ற நமது உயிர் நிகர் தலைவர் கலைஞரின் உயர்ந்த அறிவுரைக்கிணங்க கழகம் ஆங்காங்கே களத்தில் இறங்கிச் செயலாற்றிய நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய பிறகு, மத்திய - மாநில அரசுகள் தாமதமாகக் கண்விழித்துச் சோம்பல் முறித்து ஊரடங்கை நடைமுறைப்படுத்திட முன்வந்தன. ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தனிமனித இடைவெளி விட்டு, சமூக ஒழுங்குடன் ஊருக்கு ஊர் களப்பணிகள் தொடர்ந்தன. பொதுமக்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட கழகத்தின் உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் நலனையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘உங்களில் ஒருவன்’ என்ற முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
களத்தில் கழகத்தினர் ஆற்றுகின்ற அயர்விலாப் பணிகள் குறித்து அவ்வப்போது காணொலி வாயிலாக உரையாடி, ஆலோசனைகள் தெரிவித்து வந்ததுடன், ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிப்போரின் வீடுகளில் உலை வைக்க முடியாத நிலையினை நினைத்து, அவர்களுக்கு உணவுப் பொருட்களையும், உணவுப் பொட்டலங்களையும் வழங்கிடவும் வலியுறுத்தினேன். சென்னையில் கொளத்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் உதவிகளை வழங்கினேன்.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவக் கட்டமைப்புகள், பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அரசாங்கம் தாமதம் செய்து தடுமாறிக் கொண்டிருந்ததால், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், அன்றாடம் உழைத்து வருமானம் ஈட்ட வேண்டியவர்கள் மட்டுமின்றி, மாத ஊதியக்காரர்களும்கூட நெருக்கடிக்குள்ளாயினர். அவர்களுக்கு வேலை வழங்கிய நிறுவனங்களும் நெருக்கடிகளைச் சந்தித்தன. தொழில்கள் அனைத்தும் முடங்கின. அதனால், அனைத்துத் தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையும் அவதிக்குள்ளானது. உதவி வேண்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
கழகத்தினர் பல இடங்களிலும் ஓடோடிச் சென்று தங்களால் இயன்ற அளவில் உதவி செய்து வந்த நிலையில், யார் யாருக்கு உடனடி உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து அவர்களுக்கான உதவிகளை, செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து தொடங்கப்பட்டதுதான் “ஒன்றிணைவோம் வா” எனும் மகத்தான செயல்திட்டம். தமிழகம் முழுவதும் கழகத்தினர் மேற்கொண்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்கும் இந்த செயல்திட்டத்திற்காக 90730 90730 என்ற உதவி எண் தரப்பட்டது. என்னுடைய அலுவலகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள அந்த எண்ணுக்கு லட்சக்கணக்கானவர்கள் தொடர்பு கொண்டனர்.
எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உதவிட “ஒன்றிணைவோம் வா” பயன்பட்டது. தமிழகத்தில் தவித்த பிற மாநில தொழிலாளர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவிகள் செய்யப்பட்டன. செயல்திட்டம் தொடங்கப்பட்ட நான்கைந்து நாட்களிலேயே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள். அனைத்தையும் பரிசீலித்து, எந்தெந்த பகுதிகளிலிருந்து உதவி கோரப்படுகிறதோ, அந்த மாவட்டக் கழகச் செயலாளருக்கு அதுகுறித்த விவரம் அறிவிக்கப்பட்டது. அழைப்புகள் குவிந்த அளவுக்கு நிகராக, உதவிகளும் நிறைவாகச் செய்யப்பட்டன.
உதவிக்காக ஒருவர் அழைக்கும்போது, அவர் இருக்குமிடம் தேடிச் சென்று கழகத்தினர் உதவிகள் வழங்கினர். அப்போது, அந்தப் பகுதியில் அதே உதவிகள் தேவைப்பட்ட மக்களும் கழகத்தின் உதவிக்கரத்தை எதிர்பார்த்தனர். அதனால், ஒருவர் உதவி கேட்டு அழைப்பு விடுத்தாலும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரின் தேவையையும் உணர்ந்து, பரந்த அளவில் விரிவான உதவிகளை மேற்கொண்டனர் கழக நிர்வாகிகள்.
ஊரடங்கு காலம் நீடித்துக்கொண்டே போவதால், உணவு தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமானது. உணவுப் பொருட்களாகக் கொடுத்தால் சமைப்பதற்குக்கூடப் பலருக்கு வசதியில்லை என்றும், அவர்களுக்கு உணவாக வழங்கினால் பசியாறுவார்கள் எனவும் “ஒன்றிணைவோம் வா “ உதவி எண்ணுக்கு வந்த அழைப்புகள் மூலம் தெரிய வந்ததால், தமிழ்நாட்டில் நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு உணவு வழங்கிடும் வகையில் 22 இடங்களில் சமையற்கூடங்கள் அமைக்கப்பட்டு, ஊரடங்கு நேரத்துப் பசிப்பிணி தீர்க்கும் பாங்கான பணி மேற்கொள்ளப்பட்டது.
“ஒன்றிணைவோம் வா” செயல்திட்டத்தின் ஒரு கூறான ‘நல்லோர் கூடம்’ வாயிலாக சமூக அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பலரும் கழகத்தின் உதவிப்பணிகளில் இணைந்து செயல்படத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் எந்த அளவில் உதவிகள் செய்யப்படுகின்றன என்பதைக் கழக நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாகக் கேட்டறிந்து, அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் வேண்டுகோள் விடுத்தேன். இதுதொடர்பாக, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் காணொலியில் உரையாடினேன். அவர்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் குறித்துத் தெரிவித்ததுடன், அவை தொடர்பான புகைப்படங்கள், வீடியோ பதிவுகளையும் அனுப்பி வைத்தனர். மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்ந்து மண்டலவாரியாக ஒன்றிய - நகர - பேரூர் கழகச் செயலாளர்கள் பலருடன் உரையாடினேன். அனைத்து நிர்வாகிகளுடனும் உரையாட நேரம் அமைந்திடவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ளவர்களிடம் உரையாடியபோது, கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்த உள்ளங்களாக, மக்களுக்கு ஓடோடி உதவி செய்வதை அறிந்தேன்; ஆறுதல் மிகக் கொண்டேன்.
அதுபோலவே, உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளான மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரிடமும் பேசியபோது “ஒன்றிணைவோம் வா” செயல்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பாரபட்சமின்றி உதவிகள் செய்யப்பட்டு வருவதை அறிய முடிந்தது. ஒவ்வொரு பகுதியிலும் உதவிகள் தேவைப்பட்ட அ.தி.மு.க.,வினரும்கூட, “ஒன்றிணைவோம் வா” செயல்திட்டத்திற்கான ‘ஹெல்ப் லைனுக்குத்’ தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். உடனடியாக அவர்களின் முகவரியைத் தேடிச்சென்று கழகத்தினர் அளித்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மனமுவந்து நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். மற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்திட்டத்தின்கீழ் உதவிகள் பெற்று, பண்பாட்டின் அடிப்படையில், கழகத்தின் பணியினைப் பாராட்டியுள்ளனர். எவ்வித பேதமும் இன்றி, இப்போதும் “ஒன்றிணைவோம் வா” செயல்பாட்டின்படி உதவிகள் வழங்கப்படுகின்றன.
கழக நிர்வாகிகளிடம் மட்டுமின்றி, நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள், கடினமான ஊரடங்கு காலத்தை எதிர்கொள்கின்ற சிறு - குறு தொழில்துறையினர், வணிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரிடமும் கலந்து ஆலோசித்தேன்.
அதுபோலவே, வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பரிதவிக்கின்ற தமிழர்கள் குறித்தும், அங்குள்ளோரிடம் காணொளிக் காட்சி வாயிலாகக் கேட்டறிந்தேன். எல்லோருடைய தேவைகளையும் அறிந்து, கழகத்தால் இயன்ற உதவிகளைச் செய்ததுடன், அரசாங்கம் மட்டுமே செய்யக்கூடிய - செய்யவேண்டிய பணிகள் குறித்து, பொறுப்பில் உள்ள உயரதிகாரிகளிடமும் பேசினேன்.
கோவாவில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளர்களை, பெரு முயற்சி எடுத்து சொந்த ஊருக்கு அழைத்து வந்த ரிஷிவந்தியம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் அருந்தொண்டு, என்னைப் பெருமித உணர்வுக்கு ஆளாக்கியது. அவரது செயலை உதாரணமாகக் காட்டி, வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசு சுணக்கம் தவிர்த்து துரிதமாக செயல்பட வலியுறுத்தினேன்.
இதேபோல், கோவை கணபதியை அடுத்த சங்கனூர் பகுதியில் தவித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள், கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எடுத்த பெரும் முயற்சியால், சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வில்சன் எம்.பி கேட்டுக் கொண்டதற்கிணங்க, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், அங்கிருந்த ஒடிசா மாநிலத் தொழிலாளர்களுக்கு மூன்று வேளைக்குத் தேவையான உணவுகளை வழங்கவும், கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்தார். இதற்காக அந்தத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தபோது நெகிழ்ச்சியால் என் நெஞ்சம் விம்மியது.
பேரிடர் காலத்தில் தி.மு.கழகம் மேற்கொண்டுள்ள உதவிப் பணிகள், அனைத்துத்தரப்பு மக்களிடமும் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது.
கழகம் ஆட்சியில் இல்லை; அதிகாரம் கையில் இல்லை. ஆனால், ஆட்சியாளர்களிடம் உள்ள அலட்சியம் நம்மிடம் அணுவளவும் இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்நாளும் மக்களுக்குத் துணை நிற்பதே, கழகம் எனும் பேரியக்கத்தின் நிலைப்பாடு என்பதை இந்தப் பேரிடர் காலத்திலும் சிந்தனையாலும் செயலாலும் நிரூபித்து வருகிறோம்!
தி.மு.கழகத் தொண்டர்களை, 'உடுப்பு அணியாத பட்டாளத்தினர்' என்றார் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா.
சீருடை அணியாவிட்டாலும் ராணுவத்தினரைப் போன்ற கட்டுப்பாட்டுடனும், கடமையுணர்ச்சியுடனும், பேரிடர் காலத்தில் உதவி கோருபவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்து, அவர்களின் தேவையறிந்து உதவிடும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
தொடர்ந்து சிறக்கட்டும் நமது மக்கள் பணிகள். களத்தில் காலமெல்லாம் துணையிருப்பேன் உங்களில் ஒருவனாக!