மு.க.ஸ்டாலின்

“கொரோனா என்ற கொடிய வைரஸை வீழ்த்தியாக வேண்டும்! ஒன்றிணைவோம் வா” - அதிரடி திட்டத்தை அறிவித்த மு.க.ஸ்டாலின்!

கழக உடன்பிறப்புகள் அனைவரையும் 'ஒன்றிணைவோம் வா' முயற்சியில் பங்குபெற அழைப்பு விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கொரோனா என்ற கொடிய வைரஸை வீழ்த்தியாக வேண்டும்! ஒன்றிணைவோம் வா” - அதிரடி திட்டத்தை அறிவித்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இன்று (20-04-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "ஒன்றிணைவோம் வா" எனும் முயற்சியை அறிவித்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கங்களில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதில் அவர் பேசியுள்ள விவரம் பின்வருமாறு :

“ஒன்றிணைவோம் வா...!”

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே”

- இது பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரிகள்!

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா என்ற கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு முடங்கியிருக்கின்ற இந்தப் பேரிடர் நேரத்தில், பாவேந்தர் பாடிய புகழ்பெற்ற வரிகளைத் தான் நாம நினைக்க வேண்டியதாக இருக்கிறது!

அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனா என்ற கொடிய வைரஸை வீழ்த்தியாக வேண்டும்! வீழ்த்துவோம் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது!

தமிழ்நாட்டில், கடந்த காலத்தில் எத்தனையோ பேரிடர்களை நாம் பார்த்திருக்கிறோம்! பல பேரிடர்களைக் கடந்துதான் நாமும் வந்திருக்கிறோம். புயல், சுனாமி, வெள்ளம், தீ விபத்து, பஞ்சம் உள்ளிட்ட எந்தவிதமான சவால்களையும் எதிர்கொண்டு மீண்டெழுந்திருக்கிறோம். இந்தப் பேரிடரையெல்லாம், எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துதான் சமாளித்திருக்கிறோம். இந்தப் பெருமை மிக்க வரலாறு நமக்கு உண்டு!

நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்!

2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதிக்கு முன்புவரை சுனாமி என்ற வார்த்தையே நம்மில் பலருக்குத் தெரியாது. அதுவரை சந்தித்திராத நெருக்கடியை சுனாமி மூலமாகச் சந்தித்தோம். பல உயிர்களைப் பலிகொடுத்தோம். ஒரே நாளில், பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தன. அத்தனையையும் மீறி அவர்கள் வெகு விரைவாக இயல்பு வாழ்க்கையை நோக்கித் திரும்பினார்கள். அதற்குக் காரணம், ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நின்று, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கத் துணையாக இருந்து உதவிக்கரம் நீட்டியதுதான்!

தமிழக மக்களின் உள்ளன்புடன் கூடிய உதவிதான், அதுவரை தமிழ்நாடு கண்டிராத சுனாமி எனும் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களின் வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்து, நிமிர வைத்தது!

அந்தச் சுனாமியை விட ஆயிரம் மடங்கு பேராபத்துதான் இன்றைய கொரோனா! இதைத் தடுப்பதற்கு எல்லா வகையிலும் ஒவ்வொரு தனிமனிதனும் ஒத்துழைத்தால்தான் முடியும்.

கொரோனா என்பது தொற்று நோயாக இருப்பதாலும், அதற்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதாலும் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய்ப் பரவாமல் தடுக்க ஒவ்வொருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஊடரங்குதான் முழுமுதல் தடுப்புக் காவல்! இதை முறையாகக் கடைப்பிடித்தாலே வைரஸ் பரவாமல் தடுத்திடலாம்!

இந்த ஊரடங்கின் இன்னொரு பக்கம் என்னவென்றால்; இதனால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறார்கள். பசி, பட்டினியால் துடிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை; வருமானம் இல்லை; சம்பளம் இல்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் துடிக்கிறார்கள். அதாவது பசி, பட்டினி என்ற சமூக நோயால் அவர்கள் துடிக்கிறார்கள். இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது!

ஒவ்வொரு மனிதனும் பசியால் - பட்டினியால் வாடும் போதும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.

எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டும். தனித்தனியாக உதவிகள் செய்துகொண்டு இருப்பீர்கள். எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து, ஒன்று சேர்ந்து உதவ வேண்டும்!

‘ஒரு கை ஓசையாகாது - தனிமரம் தோப்பு ஆகாது’ என்று சொல்வார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும்!

அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன்!

பசியால் வாடும் உறவுகள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், குறிப்பாக ஏழை - எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

முதியோர்கள், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் நிச்சயம் உதவ வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணியைச் சேர்ந்த, பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் ஊர் ஊராகப் போய், தெருவில் நின்று, வீடு வீடாகப் போய் செய்து வரும் உதவியை நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். உங்களில் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது!

'எந்தத் துன்பம் வந்தாலும், ஆட்சியிலிருந்தாலும் இல்லை என்றாலும் தி.மு.க. காப்பாற்றும்' என்ற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.

இப்படி தனித்தனியாக நீங்கள் செய்துகொண்டு வரும் உதவிகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கின்ற முயற்சிதான் - 'ஒன்றிணைவோம் வா'!

சாதி, மதம், ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், என எந்தப் பேதமும் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து, பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவோம்!

அடுத்து வருகிற சில வார காலத்துக்கு நாம் ஒன்றிணைந்து ஏழைகளுக்குப் பசியாற்றும் பெரும்பணியைச் செய்தாக வேண்டும்.

கழக உடன்பிறப்புகள் அனைவரையும் 'ஒன்றிணைவோம் வா' என்று அழைக்கிறேன். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நான் உங்களுடன் பயணிப்பேன்!

எங்காவது சிரமங்கள், தொல்லைகள், நெருக்கடிகள் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக எனது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

நம்முடைய முதன்மையான நோக்கம் தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு, இயன்றவரை அவர்களின் பசியாற்றுவதுதான்!

இந்த உயிர்காக்கும் பணியில் ஆர்வமாக இருப்பவர் அனைவரையும் நம்மோடு ஒருங்கிணைத்து, ஒன்று சேர்த்துக் கொண்டு பணியாற்றுங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இணைப்பு பாலமாகவும் பக்கபலமாகவும் இருந்து, அவர்கள் இந்தப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான வலிமையைத் தரும் வகையில் செயல்படுங்கள்!

“ஒருங்கிணைவோம்!

உணவு தருவோம்!

உயிரூட்டுவோம்!

பசியில்லாத சமுதாயம் அமைய உறுதியேற்போம்!

அதற்கு, ஒன்றிணைவோம் வா!”

இவ்வாறு அந்தக் காணொளியில் அவர் உரையாற்றியுள்ளார்.

banner

Related Stories

Related Stories