“பா.ஜ.கவின் அலங்கோல ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீரழிவுகளில் இருந்து மக்களை திசைதிருப்ப கொண்டுவந்துள்ள CAA உள்ளிட்ட கொடும் சட்டங்களுக்கு எதிரான தி.மு.க கூட்டணியின் கையெழுத்து இயக்கத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்து இட்டுள்ளார்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் பகுதியில், இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
"கையெழுத்து இயக்கம் என்ன நோக்கத்திற்காக நடைபெறுகிறது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் அரசியல் நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு, இதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய குடியுரிமையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு CAA, NPR, NRC என்ற கொடுமையான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்து, ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டைப் பிளவுபடுத்தி, மக்களைக் கொடுமைப்படுத்தும் வகையில், குறிப்பாகச் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம்கள், இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கி இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆகியோரைக் கொடுமைப்படுத்தும் இந்தச் சட்டங்களை பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் துன்பத்தை அவர்களது ஆட்சியின் அலங்கோலங்களை மக்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகவே இந்தக் கொடுமையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் மிக கீழ்நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது; விவசாயிகள் பல கொடுமைகளுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வேளாண்மைத்துறை நசிந்து வருகிறது; பட்டதாரிகள், இளைஞர்கள் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த பிரச்னைகளையும் மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவேண்டும் என்பதற்காகவே CAA, NRC, NPR போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து, மத்திய அரசு ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி இத்தகைய நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
நாட்டில் இருக்கும் அனைவரும் சமம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சமமாக யாரும் வாழக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு கேவலமான நிலைக்கு இந்த நாடு போய்க் கொண்டிருக்கிறது. அதனால்தான் நீதிகேட்டு ஒரு நெடும் பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பணியைத் தொடங்கினோம். நேற்றைய கணக்கின்படி கையெழுத்து 2 கோடியைத் தாண்டிவிட்டது. மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு இந்த கொடுமைகளைத் தெரிந்து கொண்டு அவர்களாகவே முன்வந்து கையெழுத்துகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கையெழுத்து இயக்கத்தைக் கூட கேலி, கிண்டல் செய்து இதைத் தடை செய்ய வேண்டும் எனச் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கையெழுத்து இயக்கம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒன்றுதான் என்பதைப் பணிவோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் கலைஞர், 1983-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, கையெழுத்துகளைப் பெற்று ஐ.நா., சபைக்கே அனுப்பி வைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது வரலாறு.
ஆகவே, ஈழத் தமிழர்களுக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் தொடர்ந்து தி.மு.க குரல் கொடுக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டு நடைமுறையை உடனடியாக இந்த அரசு நிறுத்தி வைக்க வேண்டும்; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்; தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில்தான் இந்தக் கையெழுத்து இயக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது." எனத் தெரிவித்தார்.