என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று சென்னை பெசன்ட் நகரில் கோலமிட்டு கல்லூரி மாணவிகள் 6 பேர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த சாஸ்திரி நகர் போலிஸார் மாணவிகளை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
போலிஸாரின் அராஜகத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததால் மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர். இந்த விவகாரம் காட்டுத்தீ போன்று தமிழகம் எங்கும் பரவியதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக அரசின் என்.ஆர்.சி, என்.பி.ஆர், குடியுரிமை சட்டம் திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக கோலம் போடப்பட்டு வருகிறது.
மாணவிகளின் கைதுக்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தி.மு.க நிர்வாகிகளின் வீட்டு வாசலிலும் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் 6 பேரும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் “ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது” எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார்.