சென்னை வியாசர்பாடி சேர்ந்த செல்வராஜ் , சென்னை சென்ட்ரலில் உரிமம் இல்லாத சுமை தூக்கும் தொழிலை தனது 15வது வயதில் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ரயில் விபத்துகளில் சிக்கியவர்களின் உடல்களையும், தற்கொலையில் ஈடுபடுபவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியாகியது.
இதுவரையில் 5,000க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை மீட்டுள்ள செல்வராஜ் 30 ஆண்டுகளாக இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார். செல்வராஜின் பணி தொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழ் சிறப்பு கட்டுரை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராஜை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், “தனது வறுமைச் சூழலிலும் 30 ஆண்டுகளாக இந்த பணியைச் செய்துவரும் மகத்தான மனிதர் முருகனுக்கு அரசு பணி கிடைக்க மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உதவி புரியவேண்டும்” என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அழைத்து பாராட்டியது இத்தனை ஆண்டுகள் தான் செய்த பணிக்கு கிடைத்த மரியாதை என செல்வராஜ் நெகிழ்ந்துள்ளார்.