மு.க.ஸ்டாலின்

செல்வாக்கு பற்றி எடப்பாடி பேசுவதுதான் 2019-ன் சிறந்த ஜோக் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமி, தனக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்தால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இப்போதே சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாரா என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

செல்வாக்கு பற்றி எடப்பாடி பேசுவதுதான்  2019-ன் சிறந்த ஜோக் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொல்லைப்புற வழியாக வந்து முதலமைச்சராகியுள்ள எடப்பாடி பழனிசாமி, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:

அதில், “சசிகலாவின் காலில் விழுந்து , தவழ்ந்து , கூவத்தூரில் நடனம் ஆடி , கொல்லைப்புற வழியாக வந்து முதலமைச்சராகியுள்ள எடப்பாடி பழனிசாமி, ’செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன’ என்று பிதற்றி - ஈழத்தமிழர்களையும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராகப் போராடும் சிறுபான்மையின மக்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்க முடியாத , சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற முடியாத பழனிசாமி “செல்வாக்கு” பற்றியெல்லாம் பேசுவது 2019 ஆண்டின் மிகப்பெரிய ‘ஜோக்’!”

“மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோதும், மாநிலத்தில் தி.மு.க அரசு இருந்த போதும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) கொண்டு வரப்பட்டது”என்று முதலமைச்சர் பேட்டியளித்திருக்கிறார். அப்போது கொண்டு வரப்பட்ட என்.பி.ஆருக்கும், இப்போது பா.ஜ.க. அரசு கொண்டு வரும் என்.பி.ஆருக்கும் வித்தியாசம் சிறிதும் தெரியாத அவரது அறியாமை இதில் வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணி “Resident” என்பதை அடிப்படையாகக் கொண்டது; குடியிருப்புகளை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்பது. அதற்கே எதிர்ப்பு வந்ததும், அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் பா.ஜ.க. கொண்டு வந்திருக்கும் என்.பி.ஆர் என்பது தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்க வேண்டும் என்ற ஒரே உள் நோக்கத்துடன், மத ரீதியாகப் பிளவு உண்டாக்கிடக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடே கொந்தளித்துப் போராடுகின்ற ஒரு பிரச்சினையின் அடிப்படையான உண்மைத் தன்மையைக் கூடக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல், மனதில் தோன்றியவற்றை, தன்னுடைய விருப்பத்திற்கு, ஒரு முதலமைச்சர் பேட்டியாக அளிப்பதை இந்த மாநிலத்தின் கெட்ட வாய்ப்பு என்று நினைத்துத்தான் கவலைப்பட வேண்டும்.

பா.ஜ.க.வின் சார்பில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரன் ரிச்சுவும், தற்போது உள்துறை அமைச்சராகவே இருக்கும் அமித்ஷா ஆகியோரும் நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் “தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பது தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை உருவாக்கவே” என்று தெளிவாக பல்வேறு காலக்கட்டங்களில் தெரிவித்து விட்டார்கள்.

mk stalin
mk stalin
twitter

“என்.பி.ஆருக்கும், என்.ஆர்.சி” க்கும் நெருங்கிய தொடர்புண்டு”என்று பத்திரிகைகள் எல்லாம் சிறப்புக் கட்டுரைகள் எழுதிவிட்டன. அதன் பிறகும் முதலமைச்சர் மட்டும் ஏதோ “தேசியக் குடியுரிமைப் பதிவேட்டிற்கும், இந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் சம்பந்தமில்லை”என்று கூறுவது அவரது “பொய்ப் பிரச்சாரத்தின்” புதிய பரிணாமம். 2019 குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் ஆதரித்து, பிறகு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரித்து வாக்களித்து, அதன் காரணமாகவே வெற்றி பெற வைத்து, வரலாற்றுக் கேட்டைச் செய்துவிட்டு- இன்றைக்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் முதலமைச்சர் நாடகமாடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

மக்களுக்கு “பொல்லாத ஆட்சி”வழங்கும் முதலமைச்சருக்கு “நல்லாட்சி செய்கிறார்”என்று, கடைந்தெடுத்த பொய்ச் சான்றிதழ் கொடுத்த பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் - அவரது கண்களையும் பொது அறிவையும் மறைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பேட்டியில் “நல்லாட்சி” சான்றிதழ் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்குக் கூட பதில் சொல்ல அவரால் முடியவில்லை; நிச்சயம் முடியாது. ஏனென்றால் - தன் தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லை! அது மட்டுமின்றி, “ பிரதமர் பேச்சைக் கேட்க 16.1.2020 அன்று அனைத்து மாணவ மாணவிகளும் பள்ளிக்கு வர வேண்டும்”என்று ஆணை பிறப்பித்து விட்டு எதிர்ப்பு கிளம்பியதும் “அது கட்டாயமில்லை. விருப்பப்பட்ட மாணவர்கள் வரலாம் என்றுதான் உத்தரவு” என்று பச்சைப் பொய்யைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் போலவே எடப்பாடி பழனிசாமியும் கூறுகிறார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் 27.12.2019 தேதியிட்ட ஆணையில் “விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும்” என்று ஒரு வரியை முதலமைச்சரால் காட்ட முடியுமா?

File image : MK Stalin
File image : MK Stalin

ஆகவே தமிழக மக்களைப் பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளிலும் செயலுக்கும், சொல்லுக்கும் சம்பந்தமில்லாமல் செயல்பட்டு - பா.ஜ.க. அரசின் ஏவல் அரசாக இருப்பதுதான் அ.தி.மு.க ஆட்சி. பொய் அறிக்கை, பொய்ப் பேட்டி, பொய்ப் பதில் கூறுவது ஆகியவையே தனது கடமை என்று செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அந்தப் பதவிக்கான தரத்தையே அடியோடு தாழ்த்தி விட்டார் என்பது வேதனையாக இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களை மதிக்கத் தெரியவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம்.

ஈழத் தமிழர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் துரோகம் இழைத்து விட்டு கபட நாடகமாடவும் கூடாது; பதவியில் இருக்கிறோம் என்பதாலேயே மக்களிடம் செல்வாக்குப் பெற்று விட்டதாகக் கற்பனைக் கோட்டையை பழனிசாமி தனக்குத் தானே கட்டிக் கொள்ளவும் கூடாது. பணத்தை வாரியிறைத்துப் பெற்ற இடைத்தேர்தல் வெற்றியின் மயக்கத்தில், செல்வாக்கு இருப்பதாக பழனிசாமி நினைத்தால் - முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இப்போதே சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு, மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சரானால்தான், மக்கள் அவர் சொல்வதை நம்புவார்கள். கூவத்தூர் முதலமைச்சர் சொல்வதையெல்லாம் நம்புவதற்கு, தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பழனிசாமி உணர்ந்து பேசுவதும், செயல்படுவதும் அவருக்கு நல்லது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories