நூறு நாள் வேலை திட்டத்தின் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) மூலமாக தான் இந்தியாவில் வறட்சியால் தவித்து வந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஓரளவு தங்கள் வறுமையை போக்கிக் கொள்ளமுடிந்தது. கிராமப்புற பகுதியில் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 7.76 கோடிப் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கு சம்பளம் இரண்டு தவணை, மூன்று தவணையாக நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 4 மாதங்களாக, அதற்குரிய பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்குமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மகாத்மா காந்தி பெயரிலான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக - சில மாவட்டங்களில் 4 மாதங்களாக, அதற்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், பயனாளிகளை அலட்சியப்படுத்துவது மக்கள் மீதான பாஜக ஆட்சியின் அலட்சியத்தை காட்டுகிறது!
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள்நலத் திட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று! கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிடுக!'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.