தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பழனிச்சாமி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஏற்பாடு; உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடவா?'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.