கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற அனுராதா. இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் விமான நிலைய சந்திப்பில் இருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க கொடிக்கம்பம் சாய்ந்தது.
அப்போது, தன் மீது கொடி விழாமல் இருக்க, அனுராதா பிரேக் போட்டதால், அந்த நேரத்தில் நிலைதடுமாறி அனுராதா கீழே விழுந்தார். இதன்காரணமாக படுகாயமடைந்த அனுராதாவிற்கு நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
விபத்திற்குக் காரணமாக இருந்தது அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமணத்திற்காக சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிகம்பங்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.
அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டதை காவல்துறையினரும் அதிமுகவினரும் மூடி மறைக்க முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.