மோடியின் பாஜக அரசு, கடந்த 2016ம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கமும், அதன் பிறகு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பும் நாட்டு மக்களை பாடாய்படுத்தி எடுத்துவிட்டது. அதன் நீட்சியாக இந்த முறையும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வால் தொடர்ந்து வருகிறது.
டீமானிட்டிசேஷன் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் அதன் தாக்கம் சிறு,குறு வணிகர்களிடையே இதுகாறும் இருந்து வருகிறது. தற்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு பல்வேறு துறை சார்ந்த உற்பத்தியும், வணிகமும் அதளபாதாளத்திற்கு நோக்கி சென்று வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல், உணவுத்துறைகள் கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகின்றன.
இந்த நிலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 2 மாத காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த மந்த நிலையால் நாட்டின் வளர்ச்சி கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 2வது மாதமாக வீழ்ச்சி அடைந்து வருவதாக National Council Of Applied Economic Reserach என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3 சதவிகிதம் பின்னடைவை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்லாத பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொழில்துறையில் 4.3% சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசே முக்கிய காரணம் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ”இந்திய பொருளாதாரத்தை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்க மத்திய பாஜக அரசிடம் திட்டங்கள் உள்ளதா? வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் குறித்த மோடி அரசின் வாக்குறுதிகள் என்ன ஆனது?” எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.