கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. மோடி அரசின் இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதால், எதிர்க்கட்சிகள், அந்த நடவடிக்கையால் ஏற்பட்ட சீர்கேடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்திலும் இப்போதாவது அரசு செயல்படுமா என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு வணிகங்களை அழித்தது, முன் எப்போதுமில்லாத வகையில் வேலையின்மையை உருவாக்கியது மற்றும் பொருளாதார துயரத்தை துரிதப்படுத்தியது.
அதனால்தான், இன்று அரசு கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மௌனமாக உள்ளது. பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்திலும் இப்போதாவது அரசு செயல்படுமா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.