கடந்த மே மாதம் 31ம் தேதி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கைக்குக் கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்வி கொள்கைக்கு பெருமளவில் எதிர்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசு அறிவிப்பை ஏதும் வெளியிடாத நிலையில், அதிமுக அரசு முந்திக்கொண்டு அறிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க ஆட்சி இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தந்து ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால்தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம்.
தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.