கால முறை ஊதியம், பதவி உயர்வு, உயர் கல்வியில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து அரசு மருத்துவர்கள் 7 நாட்களாக வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பணியை ராஜினாமா செய்வோம் எனவும் அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இன்றைக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்பவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் அவர்கள் மீது சுகாதாரத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கின்றனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அரசின் கடமை. ஆனால், காவல்துறையின் மூலம் அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என அரசு நினைக்கிறது.
இதுமட்டுமல்லாமல் பிரேக்-இன்-சர்வீஸ், நன்னடத்தை சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் செய்வதெல்லாம் கொடுங்கோன்மையானதாகும் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.