தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நூலகங்கள் மற்றும் கலையரங்கத்தில் பார்வையிட்டார்.
பின்னர் நூலகத்தில் உறுப்பினர் ஆவதற்கான படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து தன்னை உறுப்பினராக்கிக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.
அதனையடுத்து, கலையங்கரங்கத்தைப் பார்வையிட்ட மு.க.ஸ்டாலினுடன் வாசகர்களும், ஊழியர்களும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பிறகு கலையரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்குக்குச் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் வரவேற்பளித்து மகிழ்ந்தனர்.
மாணாக்கர்களுடன் கலந்துரையாடிய மு.க.ஸ்டாலினிடம் அப்போது நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து நூலகத்தில் உள்ள அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் வாசகர்களும், நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கூறினர். மேலும், நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தற்போது கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாமல், ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.
நூலகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக தலைவர் கலைஞர் அவர்களால் 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
2011க்கு பிறகு அதிமுகவிடம் ஆட்சி மாறியதால் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரழியும் நிலையில் உள்ளது. குறிப்பாக, திருமணம் போன்ற கலை நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடுவதாகவும் அதிமுகவினர் அறிவித்தனர்.
இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து 1 லட்சத்துக்கும் மேலானோரிடம் கையொப்பம் பெற்று ஆளுநரிடம் மனுவாக அளித்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் திமுக சார்பில் தொடரப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றத்தின் ஆணைப்படி அதிமுகவின் அக்கிரமப் போக்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
உலகத்திலேயே அனைவராலும் போற்றப்படுகிற நூலகமாக விளங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நானும் உறுப்பினராக சேர்ந்துள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டுவிட்டு முறையாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அறிவுறுத்தினார்.