வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில், தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் கண்டு ரசித்தார்.
இதனையடுத்து, படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “அசுரன் படம் மட்டும் அல்ல, பாடம் என்று குறிப்பிட்ட அவர், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்” என்றும் “கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் “அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்” என உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறி பரபரப்பைக் கிளப்ப முயன்றார்.
இதனையடுத்து, முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என தெரிவித்த ராமதாசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ''மருத்துவர் ராமதாஸ், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?'' என சவால் விடுத்துள்ளார். மேலும், அந்தப் பதிவில் பட்டாவின் நகலையும் இணைத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பினார். இந்நிலையில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட தான் தயார் என, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில், ''முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.
"அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.
நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!
விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.