இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை மூடி மறைக்கும் வகையில், நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதனின் இல்லத் திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணா தலைமையில் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சி அமைந்ததும், சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க தமிழகத்தில் தோற்கடிக்கப்படவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும், பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் பல நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,759 கோடி நிதி திரட்டப்பட்டதாக எடப்பாடி கூறுகிறார். இதற்கு முன் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கொண்டுவரப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போது, புதிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் தனது அமைச்சரவை சகாக்களுடன் அரசு முறைப் பயணம் என்ற பெயரில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டினார் மு.க.ஸ்டாலின்.