சேலம் மேற்கு மாவட்டம் மற்றும் தாரமங்கலம் ஒன்றிய தி.மு.கவினர் சார்பில் தாரமங்கலம் தேர் நிலையம் அருகே கலைஞருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தாரமங்கலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், '' மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சியே தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தபடவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதித்த மக்களுக்கு உதவ தி.மு.க சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மக்களை விளம்பரத்துக்காக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விளம்பரத்துக்காக நீலகிரி மக்களை தாம் சந்தித்ததாக கூறுவது முதல்வருக்கு அழகல்ல.
சேலத்தை விட்டு, எடப்பாடியை விட்டு வேறு எங்கேனும் ஒரு கிராமத்திற்கு தனியாக முதல்வரும் வரட்டும், நானும் தனியாக வருகிறேன். அங்குள்ள மக்கள் யாரை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என பார்ப்போம்.
வெளிநாடு செல்லும் முதல்வருக்கு வாழ்த்துகள். முதலீடுகளுடன் வந்தால் வாழ்த்துகிறேன். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மக்களுக்கானதா அல்லது அவருக்கானதா. அ.தி.மு.க ஆட்சியில் 110விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டதா.
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை முதலில் எதிர்த்து தி.மு.க. கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சேலம் உருக்காலைக்கு ஆபத்து வந்துள்ளது. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுக்க ஆட்சியாளர்கள் முன்வரவில்லை'' இவ்வாறு தெரிவித்தார்.