பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், '' காமராஜரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது நமக்கு பெருமை. காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வது பெருமை அல்ல எனது உரிமை. நாட்டிற்கு பல பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர். இக்கட்டான சூழ்நிலைகளின் போது தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த தந்தை பெரியாரை, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வைத்தவர் காமராஜர்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது தான், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் திருவெறும்பூர் பெல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. காமராஜர் மறைந்தபோது காங்கிரஸ் மைதானத்தில் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தலைவர் கலைஞர் தான் காந்தி மண்டபம் அருகே காமராஜருக்கு நினைவிடம் அமைக்க வித்திட்டார்.
காமராஜர் இருந்த இடத்தில் கழிசடைகள் அமர்ந்திருப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது. காமராஜர் முதல்வராக இருந்த சமயத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக சென்று பார்வையிட்டார். ஆனால், கஜா, ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதல்வர் பழனிசாமி சென்று பார்வையிடவில்லை. அதே போல் நீலகிரி பகுதிக்கும் செல்லவில்லை. நான் நீலகிரிக்கு சென்று இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டேன்.
அதற்கு முதல்வர் பழனிசாமி நான் விளம்பரம் தேடுவதாக பேசுகிறார். ஆனால், மக்களுக்கு தெரியும் யார் எப்படி என்று. நான் கிராமங்களுக்கு சென்றால் அனைவருக்கும் தெரியும். முதல்வர் பழனிசாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. யாராவது முதல்வர் வந்துள்ளார் என்று சொன்னால் தான் அவரை பற்றி தெரியும்.
காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என கலைஞர் அறிவித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அதனை முறையாக தொடரவில்லை. '' என உரையாற்றினார்.