ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை வீசும் தென்மேற்கு பருவக் காற்றினால் கேரளா, கர்நாடகா, மும்பை மாநிலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவக் காற்றால் தமிழக கடலோரப் பகுதிகள் குறைந்த அளவு மழையையே பெறுகின்றன.
தமிழகத்திற்கு அதிகப்படியான மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யக் கூடிய வடகிழக்கு பருவமழையின் மூலமே வரும். தமிழகம் முழுவதும் கடும் நீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், ஒரு தற்காலிக நிவாரணமாக தென்மேற்குப் பருவமழையை தமிழகம் பெரிதும் நம்பி இருந்தது.
நடப்பாண்டில் ஜூன் மாதம் 8ம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் தமிழகத்தில் 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் முதற்பாதி பெய்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து 20 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆய்வுக் குழு ஒன்று பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், ''பருவமழை பெய்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து 20 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தின் முக்கிய அணைகளில் நீர் இருப்பு 15 % மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போதைய நீர் இருப்பு கால் பங்கே உள்ளது. தற்போதைய நிலையில் டெல்டா விவசாயிகளுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறப்பது எட்டாக்கனியாக உள்ளது'' என தெரிவித்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி ட்வீட் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ''தென்மேற்கு பருவகாலம் 50% முடிவடைந்த நிலையில் தமிழக அணைகளில் 20%-க்கும் குறைவாகவே நீர் உள்ளது என்பது வேதனைச் செய்தி. அ.தி.மு.க அரசு டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க வரப்போகும் சிக்கல், மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வலியுறுத்துகிறேன்'' என்று அரசை வலியுறுத்தியிருக்கிறார். இம்முறையாவது தமிழக அரசு சுதாரிக்குமா? அல்லது கடந்த ஆண்டை போல எதிர்க்கட்சிகளின் நியாயமான குரல்களை அலட்சியப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.