தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இரு மசோதாக்கள், 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின்.
கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “நீட் விலக்கு தொடர்பான இரு மசோதாக்கள் நிராக 21 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது. ஆனால், தமிழக அரசு இதனை மறைத்துள்ளது. குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிராகரித்துவிட்டால் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அதை தீர்மானமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்கிற விதி உள்ளது. தற்போது 21 மாதங்களுக்கு மேலாகி விட்டதால் அந்த மசோதாக்களை மீண்டும் அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
ஆனாலும், “மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசுக்கு எந்த தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை” என்றே தொடர்ந்து கூறி வருகிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இதுதொடர்பாக கடிதம் எழுதி விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிவித்தார் சி.வி.சண்முகம்.
அமைச்சரின் பேச்சைக் குறிப்பிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், “இரண்டு ஆண்டுகளாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறீர்கள். ஆனால் இன்னும் அதே நிலை தான் நீடிக்கிறது. இனி கடிதம் எழுதி விளக்கம் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோதெல்லாம் ஏன் அழுத்தம் தரவில்லை? இப்படியே போனால் நீட் விவகாரத்தில் தமிழகத்தின் நிலைதான் என்ன?” எனவும் வினவினார் மு.க.ஸ்டாலின்.
மேலும் பேசிய அவர், “ஏழரைக் கோடி மக்களை அ.தி.மு.க அரசு ஏமாற்றியுள்ளது. புதிதாக 2 மசோதாக்களை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தினார்.