மு.க.ஸ்டாலின்

ஏழரைக் கோடி தமிழர்களைப் புறக்கணிக்க முடியாது : உச்சநீதிமன்றத்திற்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

“உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படவிருக்கும் நிலையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கிறது” என மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

ஏழரைக் கோடி தமிழர்களைப் புறக்கணிக்க முடியாது : உச்சநீதிமன்றத்திற்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் - மொழியாக்கம் செய்து வெளியிடுவது குறித்த செய்தியை, தி.மு.கழகம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றது; அதே வேளையில், செம்மொழியாம் தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.

வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்சினையின்றி - எந்தவிதக் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்கை நடத்திய தங்களது வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதி வாதங்களையும் நன்கு தெரிந்து புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகின்றேன்.

இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

மேலும், தீர்ப்புகளின் மொழியாக்கத்தில், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்ததும் – முதன்மையானதும் - இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழித் தமிழை, உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் பல்வேறு அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எனவே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களின் இந்த வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும்.

அந்த அரிய செயலைச் செய்து அவர் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற வேண்டுமென்று, ஏழரைக் கோடித் தமிழக மக்களும் விரும்புகிறார்கள். ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகோள்” எனக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories