மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரவுடித்தனம் செய்திருப்பது அநாகரிகமானது - மு.க.ஸ்டாலின் !

ஈரோட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை ஆளும் அ.தி.மு.க.வினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரவுடித்தனம் செய்திருப்பது அநாகரிகமானது - மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை ஆளும் அ.தி.மு.க.வினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் திரு.கோவிந்தராஜ் (இந்து தமிழ் திசை) மற்றும் திரு.நவீன் (ஜூனியர் விகடன்) ஆகியோரை ஈரோடு மேற்குத் தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் கே.வி. ராமலிங்கத்தின் மகனும், மற்றும் பல அ.தி.மு.க.வினரும் கண்மூடித்தனமாகத் தாக்கியதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாக்குதலை அங்கு நின்ற ஈரோடு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கை கட்டி வேடிக்கை பார்த்து - விழாவில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களான கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோரின் ஆதரவாளர்கள் என்ன வேண்டுமானாலும் அராஜகமும், அடிதடியும் செய்யட்டும் என்று பாதுகாத்து செயலிழந்து நின்றது அதிர்ச்சியளிக்கிறது.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரவுடித்தனம் செய்திருப்பது அநாகரிகமானது - மு.க.ஸ்டாலின் !

பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் இப்படியொரு மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தி, மடிக்கணிணி வழங்கவில்லை என்று ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சகட்டமாகும்!

மடிக்கணினி வாங்குவதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் அ.தி.மு.க. அரசு பல்வேறு குளறுபடிகளைச் செய்வதால், ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

அந்த குளறுபடிகளை நீக்கி, மாணவர்களுக்கு முறையாக மடிக்கணிணி வழங்குவதற்குப் பதிலாக - செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ரவுடித்தனம் செய்திருப்பது அநாகரிகமானது.

சமீபகாலமாக போராட்டச் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் பத்திரிக்கையாளர்களை அ.தி.மு.க.வினர் தாக்குவதும் - அந்தத் தாக்குதலை காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கும் வகையில் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் தொடர் கதையாகி வருவது கவலையளிக்கிறது.

எனவே, இந்து தமிழ் திசை பத்திரிக்கை மற்றும் ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினரின் மகன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் அனைவர் மீதும் சட்டப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், தாக்குதல் நடத்த அனுமதித்து வேடிக்கை பார்த்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மடிக்கணிணி வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் எவையென உடனடியாக ஆய்வுசெய்து அவற்றைக் களைந்து, அனைத்து மாணவ மாணவியர்க்கும் மடிக்கணிணி தாமதமின்றிக் கிடைப்பதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் '' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories