மதுரையில் அரசு மருத்துவமனையில், நேற்று கனமழை பெய்த காரணத்தால் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிசந்திரன், மல்லிகா, பழனியம்மாள் ஆகிய மூவரும் மூச்சித்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் மின்வெட்டு எற்படும் போது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள சுவாசக்கருவி, மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மதுரையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வாசக்கருவிக்கு மின்சாரம் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் காரணம் என உயிரிழ்ந்தோர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது “ மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமுமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை!” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.