தூத்துக்குடியில் மே தின பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மே தின விழாவில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கீதா ஜீவன் கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “உரிமைக்காக போராடி வெற்றிகண்டு தொடர்ந்து உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாள் தான் மே 1. மே 1ம் தேதியைக் கொண்டாடுவதற்கு எல்லாவைகையில் உரிமையான இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் ஒன்று தான் என நான் பெருமையோடு தெரிவிக்கவிரும்புகிறேன்.
நாட்டின் பிரதமர் மோடி சொல்லலாம் "நான் தான் நாட்டின் பாதுகாவலர்" என்று, ஆனால் உண்மையில் அவர் காவலாளி அல்ல களவாளியாக அவர் விளங்கிக்கொண்டிருக்கிறார்! திராவிட முன்னேற்றக் கழகம் தான் நாட்டில் உள்ள தொழிலாளர்களின் காவலாளியாக தொடர்ந்து செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி மே 1 தேதியை நம் தொழிற்சங்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று அவரே முன்னின்று கொண்டாடினார். சென்னை நேப்பியர் பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று கலைஞர் சட்டமன்றத்தில் உறுதியளித்தார். அதை அதிகாரிகளிடம் விட்டுவிடாமல் அந்த நினைவுச் சின்னம் எப்படி அமையவேண்டும் என்று அவரே வரைபடம் தயாரித்து அந்த சின்னம் முறையாக அமைந்திருக்கிறதா என்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதனை தொடர்ந்து கவனித்து சரியாக வடிவமைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. இந்த நினைவு சின்னத்தைத் திறந்து வைத்தார். நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என்று பெயர் மாற்றினார்.
நாட்டிலே முதன் முறையாக 1967ல் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அறிஞர் அண்ணா மே 1 தேதி அரசு விடுமுறை என அறிவித்தார்கள். பின்னர் அவர்கள் வழியில் ஆட்சி செய்த கலைஞர் மே 1 தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்று அறிவித்தார். பின்னர் இந்த ஊதியத்துடன் விடுமுறை மாநில அளவில் இல்லாமல் இந்திய நாடு முழுவதும் அமலில் வரவேண்டும் என்று அன்றைய தினம் பிரதமராக இருந்த சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களிடம் வாதிட்டு அந்த உரிமையை பெற்றுத்தந்தார் என்று நான் பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.
மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைகளை நசிக்குகிறது. நாட்டில் உழைக்கும் விவசாயிகளுக்குத் துரோகம் விளைவிக்கிறார்கள். அவர்கள் உரிமைக்காக விவசாயிகள் தலைநகர் தில்லிக்கே சென்று போராடினாலும் கூட பிரதமர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது அல்ல பரிசளிக்கிறேன் என்று ஆறுதலுக்குக் கூட சொல்லாத “சாடிஸ்ட் மோடி” உள்ளார்.
மின் ஊழியர்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க முடியாத அரசு செயல்படுகிறது. நாட்டில் உள்ள 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் மோடி ஆட்சியில் 4, 5 நிறுவனங்களுக்கு அடகு வைத்துள்ள நிலைமை உருவாகியுள்ளது. எனவே இந்த கொடுமைகளுக்கு நிச்சயம் விடிவுகாலம் வருகிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆட்சிக்கு மாற்றாக வருகிற 23 தேதி மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு ஆட்சி அமையப்போகிறது” என அவர் தெரிவித்தார்.