மு.க.ஸ்டாலின்

உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி! உறுதியாகி வரும் உன்னத வெற்றி! - முக.ஸ்டாலின் மடல்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அயராது உழைத்த தி.மு.க. செயல் வீரர்களுக்கு நன்றி கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி!  உறுதியாகி வரும் உன்னத வெற்றி! - முக.ஸ்டாலின் மடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அயராது உழைத்த தி.மு.க. செயல் வீரர்களுக்கு நன்றி கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் எழுதிய மடலில், “ ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கிஞ்சிற்றும் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து மே 23ந் தேதிக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம். தேனீக்கள் ஒவ்வொரு பூவாகத் தேடிச் சென்று, துளித்துளியாகத் தேனைச் சேகரித்து அதனைத் தேனடையாக மாற்றுவது போல, இந்தத் தேர்தல் களத்தில் நமது அணியின் பணி இனிமையாக அமைந்திருந்தது.

வாக்குப்பதிவு நடைபெற்ற புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தமிழக சட்டப்பேரவைக்கான 18 தொகுதி இடைத்தேர்தலிலும், புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் கடுமையாகக் களப் பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய - நகர - பேரூர் - ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், வாக்குச் சாவடி கழக முகவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகள், கழகத்தின் துணை அமைப்புகளான அனைத்து அணியினர், உடன்பிறப்பு என்கிற உயர்ந்த பதவியை விரும்பி அணிந்துகொண்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள்-கழக ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் திரும்பத் திரும்பத் தெரிவித்துக் கொள்கிறேன்.

mk stalin
mk stalin
twitter

இது தேர்தல் நேர லாபங்களை மட்டும் எதிர்பார்த்து கூடிக் கலையும் பேரக் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி என்பதை ஒவ்வொரு முறையும் உறுதியுடன் நிரூபித்த மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரையிலான அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியினை உரித்தாக்குகிறேன்.

பெரும் சவாலாக அமைந்த இந்த ஜனநாயகத் தேர்தல் களத்தில், போட்டியிட வாய்ப்பு அமையாத சூழல் ஏற்பட்டபோதும், நாட்டின் பொதுநலன் கருதியும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய முதன்மையான கடமைப் பொறுப்போடும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு முழு வெற்றிக் கூட்டணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி எம்.ஜி.ஆர். கழகம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, இந்திய சமூகநீதி இயக்கம், கிறிஸ்த்தவ நல்லெண்ண இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம், இந்திய தேசிய லீக், மக்கள் விடுதலை கட்சி, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்பினருக்கும் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கிறேன். விமர்சனக் கணைகளைத் தாங்கிக்கொண்டு, கழகக் கூட்டணிக்காக பரிபூரண ஆதரவுப் பரப்புரை செய்த தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்திற்கு எப்போதும் போல எமது இதயமார்ந்த நன்றி.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அயராத உழைப்பிற்கும், அதற்கு மக்கள் தந்த ஆதரவிற்கும், முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளது. மதவெறியை வளர்த்து - மக்களிடையே பிளவு எண்ணத்தைத் தோற்றுவித்து- மாநில உரிமைகளைப் பறித்து-ஜனநாயகம் காக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான சர்வாதிகார சக்தியாக விளங்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசையும், ஊழல் செய்வது ஒன்றையே கொள்கையாகக் கொண்டு - மாநிலத்தின் நலன்கள் அனைத்தையும் மத்தியில் ஆள்வோரிடம் அடகு வைத்து-மக்களை வஞ்சித்து ஆட்சி நடத்தும் மாநிலத்தின் உதவாக்கரை அ.தி.மு.க. அரசையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி, மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்.

ஆட்சிக்காலத்தின் கடைசி நாட்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளோருக்கு இது தெரியும். அதனால்தான், தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட பல தகிடுதத்தங்களைச் செய்தனர். பணத்தால் வாக்குகளை விலை பேசும் வேலைகளில் தீவிரமாக இறங்கினர்.

தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல, தங்கள் செயலை மறைக்க தி.மு.கழகத்தின் மீது பழியைப் போட்டு வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தினர். மக்களிடம் உண்மை அம்பலப்பட்ட நிலையில், மதரீதியாக-சாதிரீதியாக வன்முறைகளைத் தூண்டும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கினர். கனன்று கொண்டிருக்கும் வன்முறை நெருப்பை சுயலாப நோக்கில் விசிறிவிடும் வேலையை வாக்குப்பதிவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுடைய தோல்வி பயத்தின் காரணமாக வெளிப்படும் மனப்பதற்றத்தின் விளைவுகள். இவற்றைத் தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்; வெறுத்து விலக்கி வைப்பார்கள்.

MK Stalin
MK Stalin

அமைதியும் நல்லிணக்கமும், அண்ணன்-தம்பி என்கிற பாச உணர்வுமே தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான அடையாளங்கள். அதனைச் சீர்கெடுக்க பாசிச சக்திகளும் அதன் அடிமைக் கூட்டமும் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் முனைமுறிந்து போகும். வன்முறையைத் தூண்டிவிட்டு, நம் கவனத்தைத் திசை திருப்பி, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை விதைத்து, மிச்சமிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களின் இயல்பான மோசடிகளால் கழகத்தின் வெற்றியைத் தட்டிப் பறித்து, தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என மாநிலத்தில் ஆளுகின்ற அடிமை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து, கணக்குப் போடுகிறார்கள். அது தப்புக்கணக்கு, பிற்போக்குத் தனமான பிழைக் கணக்கு என்பதை மக்கள் சந்தேகத்திற்கு இடமே இன்றி நிரூபிக்கத் தயாராகிவிட்ட நிலையில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது.

மக்கள் அளித்த தீர்ப்பை மாற்றும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய முடியுமா என்ற திட்டத்துடன்தான் மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஒரு பெண் அதிகாரியை நுழையச் செய்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்குள்ள ஆவணங்களைக் கைப்பற்றி மோசடி செய்ய முயற்சித்த மோசமான நடவடிக்கை அம்பலமாகிவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு தங்கள் தோல்வியின் அளவை ஓரளவேனும் குறைக்க முடியுமா என ஆரம்பத்திலிருந்து அனைத்து சதிகளையும் சூழ்ச்சிகளையும் நிறைவேற்றுகின்றனர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருப்போர். தேர்தல் ஆணையத்திடம் நாம் தொடர்ந்து முறையிட்டு வந்தாலும் அது, விழலுக்கு இறைத்த நீராக இருக்கிறது. எனவே கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டியது அவசியமாகும்.

உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி!  உறுதியாகி வரும் உன்னத வெற்றி! - முக.ஸ்டாலின் மடல்

கடல் போன்ற மக்களவைத் தேர்தல் களத்தையும், ஆறு போன்ற 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தையும் எதிர்கொண்டு கடந்தது போலவே, வாய்க்கால் போன்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நாம் செயலாற்றிட வேண்டும். கடலிலும் ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர்கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழிமறித்து திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பார்கள்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மாநில அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார்கள். அதனை முறியடித்திடும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

உங்களில் ஒருவனான நான் மே 1ந் தேதி முதல் 4 தொகுதி இடைத்தேர்தல் களத்தில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறேன். கழக நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினிரும் தோளோடு தோள் நின்று 4 தொகுதிகள் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று, ஒரு வாக்காளரையும் தவிர்க்காமல் அனைவரையும் நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்திட வேண்டும்.

ஆட்சி மாற்றத்திற்கு நம்மைவிட அதிக ஆர்வமாக உள்ள வாக்காளர்களின் மனதில், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற உண்மையையும் நம்பிக்கையையும் நன்கு விதைத்திடும் வகையில் இடைத்தேர்தல் களப் பணிகள் அமையட்டும். அது முழுமையான வெற்றியாக மலரட்டும்!.

ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே19ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் உழைப்பின் வியர்வை, மக்களின் வாக்குகளாக மாறி, உறுதியாகட்டும் வெற்றி!' என எழுதியுள்ளார்.

banner

Related Stories

Related Stories