மு.க.ஸ்டாலின்

“வாக்கு எண்ணிக்கை மையங்களை அராஜக அ.தி.மு.க-விடமிருந்து காத்திடுக!” -மு.க.ஸ்டாலின் அறிக்கை!

இரவு- பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அ.தி.மு.க ஆட்சியிடமிருந்து பாதுகாத்திடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

File image : MK Stalin
File image : MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :

“மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மதுரை மக்களவை தொகுதிக்காக வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் போது, இப்படி அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

File image : MK Stalin
File image : MK Stalin

தேர்தல் தொடங்கியதிலிருந்து பிரசாரம், வாக்குப் பதிவு அனைத்திலும் ஆளும் கட்சியினரின் அடாவடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் துணை நின்ற தேர்தல் அதிகாரிகள் இப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள்ளும் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

தேர்தல் ஜனநாயகம் தற்போதுள்ள அ.தி.மு.க ஆட்சியின் கீழும் அந்தக் கட்சியின் அத்துமீறல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியிலும் காப்பாற்றப்படுவதற்கு வழியே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. தேர்தல் நடைமுறைகளுக்கும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கும் மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் இந்தியத் தேர்தல் ஆணையமும் தமிழகத்தில் மூச்சுத் திணறி நிற்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகிறது.

தேர்தல் ஆணையத்தால், ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லை. துணை முதல்-அமைச்சரே நேரடியாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும் அதை நிறுத்த முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க வாக்களித்த போது அதையும் அங்குள்ள காவல் துறையும் தேர்தல் அதிகாரிகளும் தடுக்க முன் வரவில்லை. சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் மீது கடும் தாக்குதல் நடத்தியதையும், பொன்பரப்பியில் வாக்குப் பதிவில் செய்த தில்லு முல்லுகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

Stalin Press release
Stalin Press release

இப்போது துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இந்தத் தலைமைத் தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அதிகாரிகள் அனைவரும் ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக ஒட்டுமொத்தமாக மாறி இருப்பது தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து நேர்மையான தேர்தலுக்கு பேராபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. ஆகவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.

Stalin Statement
Stalin Statement

அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழைய விட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு- பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories