தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் சுற்றில் தேனி மாவட்டம் சீலையம்பட்டி முத்துகிருஷ்ணன் 6 காளைகள் அடக்கி முதல் இடத்தை பெற்றார். இரண்டாம் இடத்தில், 4 காளைகளை அடக்கி அவனியாபுரம் மணி மற்றும் திருப்பதி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றுப்போட்டிகளில், அவனியாபுரம் கார்த்திக் 6 காளைகள் அடக்கி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதே போல அவனியாபுரம் ரஞ்சித்குமார் 6 காளைகள் பிடித்து இரண்டாம் இடம் பிடித்தார்.
தற்போதுவரை மூன்று சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அவனியாபுரம் கார்த்திக் 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். அதே போல அவனியாபுரம் ரஞ்சித்குமார் 13 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும், தேனி மாவட்டம் சீலையம்பட்டி முத்துகிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.
இதனிடையே, 13 காளைகளை அடக்கி 2 ஆம் இடத்தில் உள்ள அவனியாபுரம் ரஞ்சித்குமாருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை வழங்கிவருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.