பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சஹர்சா (Saharsa) என்ற பகுதி. இங்கு அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், அந்த பகுதியை சேர்ந்த சிறுவர் - சிறுமியினர் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் ஜலாய் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள இந்த அரசுப் பள்ளியில், ஆண்கள் சிலர் சில பெண்களை அழைத்து வந்து ஆபாச நடனமாடியுள்ளனர்.
அதாவது, கடந்த செவ்வாய்கிழமை பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சிலர் பார் டேன்ஸர்ஸ் என்று அழைக்கப்படும், பாரில் ஆடக்கூடிய பெண் நடனக்கலைஞர்களை அழைத்து வந்து ஆபாச நடனமாடியுள்ளனர். திருமண ஊர்வலத்திற்காக இசைக்குழு மற்றும் சில பார் நடன பெண்கள் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் அரசுப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் பொழுதுபோக்கிற்காக அந்த பெண்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்த சிலர் 4 பெண்களை அழைத்து ஆபாசமாக நடனமாடியுள்ளனர்.
இந்த நிகழ்வில் சில ஆண்கள் குடித்துவிட்டு அந்த பெண்களுடன் போஜ்புரி பாடல்களுக்கு நடனமாடுகின்றனர். மேலும் இவையனைத்தையும் அந்த ஊரில் உள்ள சிறுவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
பள்ளியில், அதுவும் அரசுப் பள்ளியில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க, அரசும் போலீஸும் எப்படி அனுமதித்தது? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, இணையவாசிகளும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோவை தொடர்ந்து ஜலாய் காவல் நிலைய பொறுப்பாளர் மம்தா குமாரி, “இதுபோன்ற எந்த நிகழ்ச்சிக்கும் போலீஸ் அனுமதி வழங்கவில்லை. வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.