தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ். எஸ் மீரான் அவர்கள் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்களுக்கு ஒரு மனுவினை சமர்ப்பித்துள்ளார்.
அம்மனுவில், ஐக்கிய அரபு அமீரக அரசு அந்நாட்டில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை இழந்து தவிக்கும் வெளிநாட்டினர் 01.09.2024 முதல் 30.10.2024 க்குள் எந்தவித தண்டனையோ அல்லது அபராதமோ இன்றி தங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆவணங்களை இழந்து தங்கியுள்ளவர்களை நம் நாட்டிற்கு மீட்டுக் கொண்டு வருவதற்கு உதவி செய்யும்படி கோரியுள்ளனர்.
இம்மனுவினை பரிசீலனை செய்த தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், ஐக்கிய அரபு அமீரக அரசு அந்நாட்டில் பாஸ்போர்ட் விசா முதலான ஆவணங்கள் இன்றி அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினர் 01.03.2024 முதல் 30.10.2024 க்குள் எந்தவித தண்டனையோ அல்லது அபராதமோ இன்றி தங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லலாம் என்று ஒரு பொது மன்னிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் என்பவர் என்னிடம் வழங்கியுள்ள மனுவிலுள்ள கோரிக்கையை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
அம்மனுவில் அவர் இந்திய நாட்டு குடிமக்கள் சுமார் 15000 பேர் தங்களது ஆவணங்களை இழந்து நம் நாட்டிற்கு திரும்பி வர இயலாமல் அங்கிருந்து திரும்பி வருவதற்கு விமான கட்டணம் செலுத்தவும் வழி இன்றி தவித்து வருவதாகவும் அவர்களை இந்திய அரசு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டெடுத்து, அவர்கள் திரும்பி வருவதற்கான விமானப் பயண கட்டணத்தையும் ஏற்றுக் கொண்டு நம் நாட்டிற்கு அழைத்து வர வேண்டுமென்று வேண்டிக்கேட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் செய்துள்ள இந்த அறிவிப்பு அங்கு சிக்கிக் கொண்டுள்ள நமது குடிமக்களை மீட்டு வருவதற்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகும். இது போன்ற அந்த அரசு 2018ஆம் ஆண்டில் வழங்கி இருந்த பொது மன்னிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து சுமார் 15000 இந்தியக் குடிமக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பிற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருந்த 2020-22 ஆண்டுகளில் அங்கு பணியாற்றிக் கொண்டு வந்த இந்தியக் குடிமக்கள் பலர் தாங்கள் செய்து வந்த வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நமது நாட்டிற்குத் திரும்பி வரத் தேவையான பாஸ்போர்ட்டை இழந்தோ அல்லது அங்குப் பணியாற்றுவதற்குத் தேவையான விசாக் காலம் முடிந்து விட்டதாலோ அங்கேயே சிறு சிறு எடுபிடி வேலைகள் செய்து போதிய வருவாய் இன்றித் தவித்து வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரக அரசு இதுபோன்ற தவிக்கும் வெளிநாட்டினரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகமும் இது போன்ற மக்களுக்கு உதவிகள் செய்திட முகாம்கள் அமைத்துள்ளது. ஏறத்தாழ 500 முதல் 1,000 தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தமிழ் குடிமக்கள் உள்ளிட்ட சுமார் 15,000 இந்தியர்கள் அங்கு தக்க ஆவணங்களின்றி தங்கி இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்தி அந்நாட்டில் தக்க ஆவணங்கள் இன்றி சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை மீட்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை மீட்டு வருவதற்குத் தேவையான விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டு நமது குடிமக்களை நமது நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.