இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வரும் ஜீ மீடியா (Zee Media) ஹேக் செய்யப்பட்டதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. சுமார் 7 மொழிகளில் 14 சேனல்களை நடத்தி வரும் இந்த மீடியா, நாட்டின் பிரபலமான மீடியாக்களில் ஒன்று. இந்த மீடியா நேற்று (ஆக 21) இரவு நேரத்தில் திடீரென்று மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.
SYSTEMADMINBD என்ற ஹேக்கர்கள் இதனை ஹேக் செய்தனர். மேலும் அதில், வங்கதேச கலவர விவகாரத்தை ஜீ மீடியா கிண்டல் செய்து செய்தி வெளியிட்டு வருவதால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இனி இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஜீ மீடியா முழுமையாக கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கதேச விவகாரத்தை வைத்து கேலி செய்வதை விட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. நேற்று முழுவதும் ஜீ மீடியா SYSTEMADMINBD கையகப்படுத்தி வைத்திருந்த நிலையில், இன்று (ஆக 22) ஜீ மீடியா வலைதளம் ஹேக்கில் இருந்து விடுபட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
SYSTEMADMINBD என்பது 2023-ம் ஆண்டு முதல் இயங்கும் ஒரு ஹேக்டிவிஸ்ட் (hacktivist) குழுவாகும். இந்த குழுவானது சைபர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழு, முன்னதாக வங்கதேசம் மற்றும் இந்தியாவில் உள்ள அரசாங்க வலைதளங்களையும், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவில் உள்ள வணிக நிறுவனங்களையும் ஹேக் செய்து பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து, அங்கே நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ளது. எனினும் அங்கே பொதுமக்கள் போராட்டக்காரர்களால் பாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் அங்கிருக்கும் இந்துக்கள் மீது, இஸ்லாமியர்கள் தாக்குதல் தொடுப்பதாகவும் பல்வேறு போலி வீடியோக்கள் இணையத்தில் உலா வரும் நிலையில், வட இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மீது அங்கிருக்கும் இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்தியது. மேலும் ஜீ மீடியா, NDTV போன்ற செய்தி தொலைக்காட்சிகளும் இந்த வதந்தியை பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.