ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) வழியாக, தேர்வுகளும், நேர்காணல்களும் நடத்தி தகுதிபெற்றவர்களை, இந்திய ஆட்சிப்பணியாளர்களாக நியமிப்பதே நடைமுறை.
இந்நடைமுறையில் கூட, உழைக்கும் மக்களுக்கு சரியான இடஒதுக்கீடு இல்லை என்ற குற்றச்சாட்டு, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறதே தவிர, அதற்கான தீர்வு கிடைத்தப்பாடில்லை.
இந்நிலையில், தேர்வு, நேர்காணல்கள் எல்லாம் எதற்கு என்று, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை நேரடியாக, இந்திய ஆட்சிப் பணியாளர்களாக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்திய ஆட்சிப் பணியாளர்கள், பிரிவினைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ல் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அண்மையில் திரும்பப்பெற்ற ஒன்றிய பா.ஜ.க.வின் அடுத்த நகர்வு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை ஆட்சிப்பணியில் அமர வைப்பது தான் என்பது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து, தனது X தளத்தில் பதிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “UPSC வழியாக தகுதிபெற்றவர்களை, இந்திய ஆட்சிப் பணியாளர்களாக்காமல், ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ளவர்களுக்கு பதவி வழங்கி, இந்திய அரசியலமைப்பை சீர்குலைய வைத்துள்ளது மோடி அரசு. இதன் வழி, SC,ST மற்றும் OBC வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை தகுதிபெற்ற இளைஞர்களின் உரிமைகளை சுரண்டுவாதகவும் அமைந்துள்ளது. இந்தியா கூட்டணி, இச்சுரண்டலை வன்மையாக கண்டிக்கிறது. இந்திய ஆட்சிப்பணியாளர்களை தனியார் மயமாக்கியது, இடஒதுக்கீடுக்கு இடப்பட்ட தடை” என பதிவிட்டுள்ளார்.