கடந்த ஆண்டு, பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் மீது, கடுமையான பாலியல் குற்றச்சாட்டு வைத்தவர் வினேஷ் போகத். பா.ஜ.க.வின் தலைமையால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டவர் வினேஷ் போகத்.
இந்திய பண்பாட்டை பேணுகிறோம் என மேடைக்கு மேடை பேசும் பா.ஜ.க, பெண்களுக்கான சுதந்திரத்தை பேணாமல், பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தான் சுதந்திரமாக நடமாட பேணிக்காத்து வருகிறது என்ற முழக்கத்தை நாடறிய செய்தவர் வினேஷ் போகத்.
அதற்காகவே, பல பதக்கங்களுக்கு சொந்தமானவரான வினேஷ் போகத்திற்கு, கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் தங்கம், தகுதிநீக்கம் என்கிற பெயரில் பறிக்கப்பட்டதா என்ற கேள்வியும் ஒருபுறம் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், தகுதிநீக்கத்திற்கு எதிரான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய ஒலிம்பிக் அமைப்பும், ஒன்றிய பா.ஜ.க அரசும், தேவைக்கு மாறாக வினேஷ் போகத்தை விமர்சித்தது. தன் தேசத்தின் மகள் என்ற எண்ணம் இல்லாமல், வினேஷ் போகத்தின் அலட்சியம் தான், தகுதிநீக்கத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தனர் பா.ஜ.க.வினர்.
இதனால், வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில், பா.ஜ.க.வின் பங்கும் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.
அக்கேள்விக்கான விடையாகவே, வினேஷ் போகத்தின் வருகையில் பா.ஜ.க.வின் புறக்கணிப்பு நடவடிக்கையும் அமைந்துள்ளது. எனினும், பா.ஜ.க செய்ய தவறியதை, எதிர்க்கட்சியாக இருந்து இந்தியா கூட்டணி செய்து வருகிறது.
வினேஷ் போகத்தை, வரவேற்ற முதல் ஆளாக, அரியானா காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா இருந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “எனக்கு மல்யுத்த போட்டிகளில் தொடர விருப்பம் உள்ளது. எனினும், தற்போதைய அளவில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கான நீதி இன்றளவும் கிடைக்கப்படவில்லை. எங்களது போராட்டம் தொடரும், உண்மை வெற்றியடையும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.