இந்தியாவின் பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீரில், ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
அதாவது ஒன்றியத்தில் பா.ஜ.க.வின் ஆட்டம் தொடங்கிய போது நடத்தப்பட்ட தேர்தலுக்கு பின், ஆட்டம் முடிவுநிலையில் இருக்கும் வேளையில் தான் மீண்டும் மக்களாட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, ஒன்றியத்தில் பா.ஜ.க கட்சி பெரும்பான்மை இழந்ததே, முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. பெரும்பான்மை இழக்க செய்த இந்தியா கூட்டணிக்கும், இந்த மக்களாட்சி மீட்பில் பெரும் பங்கு இருக்கிறது என்பது தவிர்க்கமுடியாததாய் விளங்குகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணைய முதன்மை அதிகாரிகள், ஜம்மு - காஷ்மீரில் நடக்க இருக்கிற தேர்தல் குறித்த விவரங்களை மக்களுக்கு அறிவித்தனர்.
அவ்வகையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதன்மை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 நாட்களில், மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும். இங்கு, மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன, 87.09 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 44.46 இலட்சம் ஆண் வாக்காளர்களும், 42.62 பெண் வாக்காளர்களும் அடங்குவர். இவர்கள் வாக்களிக்கும் வகையில் சுமார் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 4ஆம் நாள் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதன் வழி, தேர்தலை எதிர்நோக்கி, தேர்தலால் ஆதிக்க அதிகாரத்தை வென்றெடுப்போம் என ஜம்மு - காஷ்மீர் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.