கடந்த 10 ஆண்டுகளில் ஆதிக்க ஆட்சியை செயல்படுத்தி வந்த பா.ஜ.க.விற்கு, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி முட்டுக்கட்டை போட்டது. சுமார் 230க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களை தன் வசமாக்கியது இந்தியா கூட்டணி.
இக்கூட்டணியின் தலைமை பொருப்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் முன்னிறுத்தப்பட்டார். இது பா.ஜ.க.விற்கு மிகுந்த அடியாக மாறியது. இதனை ஈடுகட்டுவதற்கு பல வேலைகளையும் செய்து வருகிறது பா.ஜ.க.
நாடாளுமன்ற விவகாரங்களை பொறுத்தவரை, ஒன்றிய அமைச்சர்களுக்கு நிகரானவர், எதிர்க்கட்சி தலைவர். அவ்வப்போது, பிரதமருக்கு அடுத்து எதிர்க்கட்சி தலைவர் தான் என்ற நடவடிக்கையும் உண்டு.
அவ்வாறு இருக்கின்ற சூழலில், 18ஆவது மக்களவையின் முதல் விடுதலை நாள் விழாவில், கடைசிக்கு முன் வரிசையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கி, பாரபட்சம் பார்த்துள்ளது பா.ஜ.க.
காரணம், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் முதன்மை முழக்கங்களுள் முதன்மையான முழக்கம், காங்கிரஸின் தலைமைகளுள் ஒருவரான ராகுல் காந்தியை காணாமல் போக வைப்பது தான். ஆனால், அம்முயற்சிகள் தரைமட்டம் ஆகும் வகையில், ராகுல் காந்தி தொடர் ஏறு முகத்தில் உள்ளார்.
அதன் வெளிப்பாடு தான், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பும். ஆகவே தான், அரசியலில் பின்னுக்கு தள்ள இயலவில்லை என்று, விழாவில் பின் இருக்கை ஒதுக்கியுள்ளது பா.ஜ.க.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநட்டே, “விடுதலை நாள் விழாவில் ஐந்தாவது வரிசையில் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் என்பவர் அமைச்சர்களுக்கு நிகரானவர். அமைச்சர்களை முதல் வரிசையில் அமர வைத்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவரை கடைசி வரிசையில் அமர வைத்தது இவர்களின் கீழ்த்தரமான சிந்தனையைத்தான் காட்டுகிறது. ஆனால் இதில் ராகுலுக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஐந்தாவது வரிசையோ ஐம்பதாவது வரிசையோ எங்கிருந்தாலும் ராகுல் காந்தி மக்கள் விரும்பும் தலைவராகதான் இருப்பார்” என்றார்.