பா.ஜ.க.வினரின் அரசியலுக்கு எதிராக போராடினாலும், பா.ஜ.க.வின் அரசியலுக்கு எதிர்மறையான கருத்து கொண்டிருந்தாலும், மத நல்லிணக்கத்தை பேணிக்காத்தாலும், அடக்குமுறை அரசியலை எதிர்ப்பவர்களுக்கு மரியாதை செலுத்தினாலும், பா.ஜ.க.வினரால் விமர்சிக்கப்படுவர் என்பது நடப்பு ஒலிம்பிக்கின் இறுதி கட்டத்தில் வெளிப்பட்டுள்ளது.
அதலில், முதன்மையாக விமர்சிக்கப்பட்டவர் வினேஷ் போகத். இவர் கடந்த ஆண்டு, ஒன்றிய பா.ஜ.க.வின் அப்போதைய எம்.பி. பிரிஜ் பூஷன் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டு வைத்தவர். நீதிக்காக சாலைகளில் போராடியவர். மோடி அரசின் புறக்கணிப்பை ஆணித்தரமாக கண்டித்தவர்.
அதன் காரணமாகவே, வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, ஒன்றிய பா.ஜ.க நடப்பு எம்.பி ஹேம மாலினி, தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவர் குஷ்பு உள்ளிட்டவர்கள் வினேஷ் போகத்தை விமர்சித்தனர்.
தகுதிநீக்கத்தில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில், தகுதிநீக்கம் சதி தானா? என்ற கேள்வி குறித்த நாடாளுமன்ற விவாதத்தை, தொடர்ந்து புறக்கணித்தும் வருகிறது ஒன்றிய பா.ஜ.க.
இவரை அடுத்து, விமர்சனத்திற்குள்ளானவர், நடப்பு ஒலிம்பிக்கில் இரு வெண்கல பதக்கங்களை வென்ற, மனு பாக்கர். காரணம், இரு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், ஒன்றிய பா.ஜ.க.வினரை சந்திக்காமல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்தது தான்.
அதன் தொடர்ச்சியாக தற்போது விமர்சிப்பை சந்தித்து வருபவர், ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் தாய். இவர், “வெள்ளி பதக்கத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் நதீமும் என் குழந்தை போலத்தான்” என்று தெரிவித்திருந்தார். ஒற்றுமை மனப்பான்மையை விதைப்பதில் கூட, பாகிஸ்தானை சேர்ந்தவரை எவ்வாறு அப்படி சொல்லலாம் என விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து, மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், “நீரஜ் சோப்ராவின் தாய் எளிமையாக பேசினாலும் ஆழமான சொற்களை கூறியிருக்கிறார். தங்கம் வென்ற நதீமும் குழந்தை போல தான் என ஒரு சாம்பியனை பெற்ற தாய் கூறியிருக்கிறார் என்பது அவரின் பரந்த மனதை வெளிக்காட்டுகிறது. எனினும், அவருக்கு எதிராக ஒரு கூட்டம் ட்விட்டரில் வசைபாடி கொண்டிருக்கிறது” என்றார்.