தானத்தில் சிறந்த தானம் பட்டியலில் உடல் உறுப்பு தானமும் முதன்மை பெற்றுள்ளது. இறந்துபோகும் ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பலருக்கும் வாழ்வு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு உறுப்பு தானம் திட்டம் கலைஞர் ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. அதிலிருந்து 1,706 நன்கொடையாளர்களிடம் இருந்து 6,249 முக்கிய உறுப்புகளை அரசு மீட்டெடுத்துள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு பெற்றுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. இந்த அருமையான திட்டத்தை மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் அவ்வாறு உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது வரை, மூளைச்சாவடைந்த ஒருவர் உயிரிழந்து அவர்கள் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டால், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறை இது போன்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிலையில், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல கருத்தும் நிலவி வருகிறது.
மேலும் தற்போது உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த அருமையான அறிவிப்பை தொடர்ந்து, ஒடிசாவின் பாஜக கூட்டணியுடன் ஆட்சியமைத்த முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் இதனை தனது மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு, ஒடிசாவை தொடர்ந்து பாஜக கூட்டணி ஆந்திரா அரசும் இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது இறப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு ஆந்திர அரசு அரசு மரியாதை செய்யும் என்று அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், தோழி விடுதி என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஒன்றிய அரசும், அண்டை மாநிலங்களும் செயல்படுத்தி வரும் நிலையில், அந்த வரிசையில் இறப்பதற்கு முன் உடல் தானம் செய்பவருக்கு அரசு மரியாதை என ஆந்திரா அரசு அறிவித்திருப்பது திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே முன்னோடியான ஆட்சி என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக திகழ்கிறது.