ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் உச்சம்தான் குடியுரிமை திருத்த சட்டம்.
இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்கள் நாடுமுழுவதும் வலுவான போராட்டங்களை நடத்தினர். அதேபோல் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் சிறுவான்மை மக்களுக்கு எதிராக அப்பட்டமான ஒடுக்குமறைகள் நிகழ்த்து வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை அடுத்து, மாநிலங்களில் உள்ள பா.ஜ.க அரசுகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கி வருகிறது.
அண்மையில்தான் உத்தர பிரதேசத்தில் லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டபேரவையில் தாக்கல் செய்துள்ளது. தற்போது அசாம் மாநில அரசும்,லவ் ஜிகாத் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ஹிமந்த சர்மா கூறியுள்ளார்.
அதேபோல், இஸ்லாமியர்களுக்கு நிலம் விற்க முதலமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அசாமி முதலமைச்சர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார்.இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கவே இந்த இரண்டு சட்டங்களை அசாம் பா.ஜ.க அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக அசாம் அரசு சட்டமியற்றுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற குடியரசு. மக்கள் பல்வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நம் குடிமக்கள். அவர்களுக்கு அரசியல் சாசன உரிமையும், ஜனநாயக உரிமையும் உண்டு. இஸ்லாமியருக்கு நிலம் விற்பதை தடுக்கும் வகையில் ஒரு சட்டத்தை ஒரு மாநில அரசாங்கம் கொண்டு வர முடியாது. பிரதமர் மோடி இதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.