கேரளாவில் அதி கனமழை காரணமாக வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
எச்சரிக்கை விடுத்த 24 மணிநேரத்திற்குள், வயநாட்டில் சூரல் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, சுமார் 400 குடும்பங்கள் வசித்த பகுதி மிகுந்த பாதிப்படைந்தது.
இதனையடுத்து, பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்புப்படையினர் வயநாடிற்கு விரைந்தனர். எனினும், கடுமையான பாதிப்பிற்குள் சிக்கி, இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் வயநாட்டில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்தது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தமிழ்நாட்டிலிருந்து மீட்புப்படை அனுப்பப்படும். இந்த நெருக்கடியான நேரத்தில் கேரளாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு மிகுந்த வருத்தமளிக்கிறது. மீட்பு பணி தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசினேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என நம்புகிறேன். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என X தளத்தில் பதிவிட்டார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வயநாட்டு நிலச்சரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணிக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.