கடந்த 2019 - 2024 பா.ஜ.க ஆட்சிக்காலத்திலேயே கடுமையான தொடர்வண்டி விபத்துகள் அரங்கேறிய நிலையிலும், 18ஆவது மக்களவையில் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கே நீட்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, அப்போதைய அளவியில் கடும் விமர்சனத்தைப்பெற்ற நிலையில், தற்போதைய தொடர்வண்டி விபத்துகள், பா.ஜ.க எடுத்த முடிவு அபாயகரமானது என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
அவ்வகையில், வரலாற்றில் இடம்பெறாத அளவிற்கு, 2023ஆம் ஆண்டு சுமார் 20 பெரும் தொடர்வண்டி விபத்துகள் அரங்கேறியதையே முறியடிக்கும் வகையில், நடப்பாண்டு விபத்துகள் இடம்பெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த இரு வாரங்களில், (ஜூலை 18 முதல் ஜூலை 30) சுமார் 7 இடங்களில் தொடர்வண்டி விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.
உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட விபத்துகளை தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலா அருகே சரக்கு தடம் புரண்ட விபத்து, கடந்த இரு வாரங்களில் நடந்த 7ஆவது ரயில் விபத்து.
இதில் சிலவற்றில் உயிர்சேதம் இல்லை என்றாலும், விபத்துகள் அனைத்தும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையே அம்பலப்படுத்தி வருகின்றன.
இது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இன்று அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் பிரிவில் ஹவுரா ரயில் தடம் புரண்டு நிறைய உயிர்பலி ஏற்பட்டிருக்கிறது. ஏராளமானோர் காயம் அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற ரயில் விபத்து சம்பவம் தொடர்கிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள போகிறோம்? ஒன்றிய அரசின் அடாவடித்தனத்திற்கு முடிவே இல்லையா?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.