உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக சத்சங்கம் நிகழ்ச்சியில் சாமியார் போலே பாபாவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சாமியார் போலே பாபா காலடி மண்ணை எடுக்க பலரும் முண்டியடித்து சென்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதும் இந்த விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தரப்பில் தகவல் வெளியானது.
இதையடுத்து இந்த சம்பவம குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், போலே பாபா மீது வழக்குப்பதியவில்லை. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தும், கோரிக்கை வைத்தும் பாஜக அரசு போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனிடையே இந்த விவகாரமே பூதாகரமான நிலையில், போலே பாபா தலைமறைவாக இருந்தார்.
மேலும் ஹாத்ரஸ் துணை ஆட்சியர், தாசில்தார், காவல் ஆய்வாளர், 2 காவலர்கள் உட்பட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் தலைமறைவாக இருந்த போலே பாபா, மீது எந்தவொரு வழக்கும் பதியவில்லை என்பதால் 16 நாட்களுக்கு பிறகு தற்போது ஆசிரமம் திரும்பியுள்ளார்.
அப்போது ஆசிரமத்தில் வைத்து பேட்டியளித்த அவர், "121 பேர் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்தது. அனைவரும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கத்தான் வேண்டும். ஆனால் நேரம் மட்டும் நிச்சயமற்றது. மரணத்தை யாராலும் தடுக்க முடியாது" என்றார். இவரது இந்த பொறுப்பில்லாத பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.