நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இதனிடையே பாஜகவினர் பிரசாரத்தின்போது, அரசியலமைப்பை மாற்றுவதே நோக்கம் என்ற வகையில் பேசி வந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு உண்மைக்கு புறம்பான பிரசாரங்களிலும் மோடி உட்பட பாஜகவினர் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அரசியலமைப்பை பாதுகாப்பது நமது கடமை என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். அதிலும் ராகுல் தனது ஒவ்வொரு பிரசாரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தின் சிறிய புத்தகத்தையும் வைத்துக்கொண்டே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது மக்கள் மத்தியில் சிறந்த கவனத்தை பெற்றது.
இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கிய நிலையில், பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மீதமிருக்கும் எம்.பி-க்கள் இன்று (ஜூன் 25) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எம்,பி-க்கள் தமிழில் உறுதிமொழியை வாசித்து, அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அவ்வாறு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், நீட் தேர்வுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்தார். 'வேண்டாம் நீட், Ban நீட்' என்று முழக்கமிட்டு, பின்னர் கையெழுத்திட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.
இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. தொடர்ந்து நீட் தேர்வில் குளறுபடிகள் அரங்கேறி வருவதால் நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு தற்போது பல்வேறு மாநிலங்களில் எதிரொலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.